தட்டித்தூக்கும் தவெக; தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய பேரவை- அரசு உரையை அப்படியே வாசித்த ஆளுநர்!
தவெக தலைமையிலான தமிழ்நாடு அரசு கொடுத்த உரையில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளாமல் ஆளுநர் அர்லேகர் வாசித்து வருகிறார்.

தவெக தலைமையிலான தமிழ்நாடு அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று (ஜூன் 18) காலை சரியாக 10 மணிக்குத் தொடங்கியது. முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர்களைத் தொடர்ந்து முதல்வர் விஜய் பேரவைக்கு வந்தார். முதல்வர் மற்றும் ஆளுநருக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்துடன் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியது. ஆளுநர் உரையுடன் பேரவை தொடங்குவது மரபு. அந்த வழக்கப்படியே, ஆளுநர் அர்லேகர் உரையுடன் பேரவை தொடங்கி உள்ளது.
எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளாமல்..
தவெக தலைமையிலான தமிழ்நாடு அரசு கொடுத்த உரையில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளாமல் ஆளுநர் அர்லேகர் வாசித்து வருகிறார். பேரறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்டவர்களின் மேற்கோள்களையும் கோடிட்டுக் காட்டினார்.
ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்
மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடந்து முடிந்த பிறகு, தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். சமூகநீதி சர்வே என்ற பெயரில் இது நடைபெறும். எனினும் தமிழ்நாட்டின் 69 சதவீத இட ஒதுக்கீடு பாதுகாக்கப்படும். 2031-ல் இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு மாறும்.
மேகதாது அணையை கட்டவிடமாட்டோம்
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு உரிய நீரை வழங்காத கர்நாடக அரசு, உபரிநீரை மட்டுமே விடுவிக்கிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கெடுக்கும் வகையிலான மேகதாது திட்டத்தை தடுக்கவும், உரிய நேரத்தில் தண்ணீரை பெறவும் அனைத்து வகையான சட்ட நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும்.
போர்க்கால அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பல்
போர்க்கால அடிப்படையில் பள்ளிக் கல்வித்துறை உயர் கல்வித்துறையில் உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இரு மொழிக் கொள்கையே தொடரும். மத்திய அரசு உடனடியாக மாநில அரசுக்கான நிதியை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அம்சங்களை ஆளுநர் தெரிவித்துள்ளார்.
கடைசியாக கடந்த 2023ம் ஆண்டு அரசு உரையை வாசித்த அப்போதைய ஆளுநர் ஆர்.என். ரவி, குறிப்பிட்ட சில பகுதிகளை தவிர்த்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாம்: "10 லட்ச ரூபாய்க்கு நீட் வினாத்தாள் கசிவா? மோசடி!" ஐஐடி சென்னை இயக்குநர் பகீர்!
முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து தமிழக சட்டப்பேரவைக்கு வருகை புரிந்தனர். அப்போது, தங்களின் சட்டைகளில் "வாயை திறங்க CM" என்ற வாசகங்கள் அடங்கிய பேட்ஜ்களை குத்தியிருந்தனர்.
அதேபோல, கைகளில் பல்வேறு கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் பதாகைகளில், "தூய சக்தி அல்ல துயர சக்தி", "கதறல் கேட்குதா CM?", "திரையில் நாயகன், தரையில் வில்லன்", "REELS இங்கே REALS எங்கே?", "மாற்றம் அல்ல இது ஏமாற்றம்" மற்றும் "வாயில் ஏதாவது வருமா CM?" போன்ற முழக்கங்கள் இடம்பெற்றிருந்தன.
ட்ரெண்டிங் செய்திகள்






















