DMK DMDK Alliance: திமுக கூட்டணியில் தேமுதிக? எத்தனை தொகுதிகள் தரப்போறாங்க தெரியுமா?
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக திமுக கூட்டணியில் இடம்பெற தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டின் அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியினரும் அதற்கான பணிகளில் தீவிரமாக நடந்து வருகிறது.
கூட்டணி கட்சிகள்:
ஆட்சியை மீண்டும் பிடிக்க திமுக-வும், இழந்த ஆட்சியை கைப்பற்ற அதிமுக-வும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுடன் அறிமுக கட்சியான விஜய்யின் தவெக-வும், நீண்ட காலமாக அரசியலில் உள்ள நாம் தமிழரும் அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கட்சிகள் ஆட்சிக்காக களத்தில் இறங்கினாலும் தேமுதிக, பாமக போன்ற முக்கிய கட்சிகள் கூட்டணியில் முக்கிய அங்கமாக உருவெடுக்க வியூகம் வகுத்து வருகின்றனர். குறிப்பாக, தேமுதிக தற்போது வரை யாருடன் கூட்டணி என்ற எந்த தகவலும் வெளியாகவில்லை. கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக-வுடன் கூட்டணியில் இருந்த தேமுதிக-விற்கு ஒரு ராஜ்யசபா தொகுதி தருவதாக அதிமுக தரப்பில் கூறப்பட்ட நிலையில், பின்னர் தேர்தல் தோல்விக்குப் பிறகு ராஜ்யசபா சீட் தர அதிமுக மறுத்துவிட்டது. இதனால், அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக வெளியேறியது.
திமுக-வுடன் பேச்சுவார்த்தை நடத்திய தேமுதிக:
தொடர் தேர்தல் தோல்விகளால் துவண்டு வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக-விற்கு இந்த தேர்தல் முக்கியமான தேர்தல் ஆகும். இதனால், கூட்டணியை வலுப்படுத்த தேமுதிக-வை தங்கள் பக்கம் இழுக்க விரும்பினார். ஆனால், தற்போது வரை அதிமுக கூட்டணிக்கு சம்மதம் சொல்லாத பிரேமலதா விஜயகாந்த், திமுக கூட்டணிக்குச் செல்ல தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டணி தொடர்பாக திமுக - தேமுதிக இடையே பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இரு கட்சியின் முக்கிய தலைவர்கள் இந்த பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் தேமுதிக தங்களுக்கு சட்டசபைத் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தது.
8 தொகுதிகள்:
ஆனால், கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் என்று பெரிய பட்டாளமே இருப்பதாலும், கூட்டணிக்குள் பாமக-வையும் இழுக்க காய் நகர்த்தப்பட்டு வருவதாலும் ஒற்றை இலக்கத்திலே தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று திமுக தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதாவது, வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறும் பட்சத்தில் அவர்களுக்கு 8 தொகுதிகளை ஒதுக்க திமுக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. தேமுதிக-வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள 8 தொகுதிகளை ஒதுக்க திமுக உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சரிந்துள்ள செல்வாக்கு:
கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியாக உயர்ந்த தேமுதிக, அதன்பின்பு நடந்த தேர்தல்களில் விஜயகாந்தின் உடல்நலக்குறைவால் செல்வாக்கு சரிந்தது. தற்போது விஜயகாந்த் காலமான பிறகு தேமுதிக சந்திக்க உள்ள முதல் தேர்தல் இதுவாகும். தொடர் தோல்விகளிலே இருக்கும் தேமுதிக-வும் தங்களை வெற்றிக்கூட்டணியில் இணைத்துக் கொள்ளவே ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பேச்சுவார்த்தை:

ஒரு பக்கம் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்கவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அதிமுக கூட்டணியில் பாஜக மட்டுமே பெரிய கட்சியாக உள்ள நிலையில் தேமுதிக, தவெக, பாமக ஆகிய கட்சியினரிடமும் எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.





















