தாம்பரம்-விழுப்புரம் ரயில் சேவை மாற்றம்: பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
சென்னை எழும்பூர் - விழுப்புரம் மார்க்கத்தில் முக்கியப் பொறியியல் பணிகள் நடைபெற இருப்பதால், தாம்பரம் - விழுப்புரம் மெமு பாசஞ்சர் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: சென்னை எழும்பூர் - விழுப்புரம் மார்க்கத்தில் முக்கியப் பொறியியல் பணிகள் நடைபெற இருப்பதால், தாம்பரம் - விழுப்புரம் மெமு பாசஞ்சர் ரயில் சேவையில் இன்று (நவம்பர் 5) மற்றும் வரும் நவம்பர் 8-ம் தேதி மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தாம்பரம் - விழுப்புரம் ரயில் சேவையில் மாற்றம்
சென்னை எழும்பூர் - விழுப்புரம் மார்க்கத்தில் முக்கியப் பொறியியல் பணிகள் நடைபெற இருப்பதால், தாம்பரம் - விழுப்புரம் மெமு பாசஞ்சர் ரயில் சேவையில் இன்று (நவம்பர் 5) மற்றும் வரும் நவம்பர் 8-ம் தேதி மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.
ரயில் சேவை மாற்றம் குறித்த விவரங்கள்:
ரத்து செய்யப்படும் பகுதி (புறப்பாடு):
தாம்பரம் - விழுப்புரம் மெமு பாசஞ்சர் ரயில்: நவம்பர் 5 மற்றும் நவம்பர் 8 ஆகிய தேதிகளில் காலை 9.45 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட வேண்டிய இந்த ரயில், ஒலக்கூர் மற்றும் விழுப்புரம் இடையேயான பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இதன் பொருள், ரயில் ஒலக்கூர் வரை மட்டுமே செல்லும்.
ரத்து செய்யப்படும் பகுதி (திரும்பும் சேவை):
விழுப்புரம் - சென்னை கடற்கரை மெமு பாசஞ்சர் ரயில்: மேற்படி நவம்பர் 5 மற்றும் நவம்பர் 8 ஆகிய தேதிகளில் மதியம் 1.40 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட வேண்டிய இந்த ரயில், விழுப்புரம் மற்றும் ஒலக்கூர் இடையேயான பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இதன் பொருள், ரயில் ஒலக்கூரில் இருந்து புறப்பட்டு சென்னை கடற்கரை நோக்கிச் செல்லும்.
இந்த மாற்றம், சென்னை எழும்பூர் - விழுப்புரம் மார்க்கத்தில் திண்டிவனம் யார்டில் மேற்கொள்ளப்படும் முக்கியமான பொறியியல் பணிகள் காரணமாக பயணிகளின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தற்காலிகமாகச் செய்யப்பட்டுள்ளது.
ரயில் பயணிகள் இந்தத் தேதிகளில் தங்கள் பயணத்தைத் திட்டமிடும்போது இந்தத் தற்காலிக மாற்றத்தை கவனத்தில் கொள்ளுமாறு சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் பணிகளுக்கு முக்கிய தகவல்கள்:-
தட்கல் டிக்கெட் முன்பதில் என்ன மாற்றம்?
ரயில் நிலையம் டிக்கெட் கவுண்டர்களில் தட்கல் டிக்கெட் பெறுபவர்களுக்கு ரயில்வே கொண்டு வந்த புதிய ரூல்ஸ் பெரிதும் உதவியாக இருக்கும். புதிய விதிமுறைப்படி, தட்கல் டிக்கெட் படிவத்தில் மொபைல் எண்ணைச் சேர்ப்பது இப்போது கட்டாயமாகும். டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் அல்லது டிக்கெட் கவுண்டர் கண்காணிப்பாளர் டிக்கெட் படிவத்தை ஏற்று கொள்வதற்கு முன்பு, மொபைல் எண்ணைச் சரிபார்ப்பார்.
சந்தேகத்திற்கிடமான எந்தவொரு செயல்பாட்டையும் உடனடியாகக் கண்டறிய ரயில்வே பாதுகாப்புப் படையினரால் மொபைல் எண்ணும் சரிபார்க்கப்படும். இது போலியாக டிக்கெட்டுகளைப் பெறுவதற்கான வாய்ப்பைக் கணிசமாகக் குறைக்கும். மேலும், டிக்கெட் முன்பதிவு செய்பவர் மற்றும் அவரது தாய், தந்தைக்கு மட்டுமே டிக்கெட் படிவங்கள் வழங்கப்படும்.
உறவினர்கள் என யாருக்கும் தட்கல் டிக்கெட் படிவம் வழங்கப்படாது. டிக்கெட் முன்பதிவு கவுண்டர்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் பணியமர்த்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தட்கல் டிக்கெட்டுகள் விற்பனை செய்பவர்களை சம்பவ இடத்திலேயே பிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ரயில்வே பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். இந்த அமைப்பு டிக்கெட் மையங்களில் ஒழுக்கத்தையும் வெளிப்படைத்தன்மையையும் பராமரிக்க உதவும். இந்த புதிய விதிமுறை பயணிகளுக்கு பணத்தை மிச்சப்படுத்தும். இனி தட்கல் டிக்கெட் பெறும்போது கூடுதலாக ரூ.500 முதல் ரூ.600 வரை மிச்சப்படுத்த உதவும். தட்கல் டிக்கெட்டை விற்பனையும் இது தடுக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.





















