"கோயில்களை பக்தர்களிடம் அளிக்கவேண்டும் என்பது முட்டாள்தனமான யோசனை" - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
கோயில்களை அறநிலைய துறையின் நிர்வாகத்திலிருந்து விடுவிக்கவேண்டும் என்பது தொடர்பான கருத்துக்கு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அறநிலையை துறையின் நிர்வாகத்திற்கு கீழ் உள்ள கோயில்களை விடுவிக்க வேண்டும் என்று கருத்து பெரிய அளவில் எழ தொடங்கியுள்ளது. மேலும் திமுக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தவுடன் திருச்சி ஶ்ரீரங்கம் கோயிலின் ஜீயர் பதவிக்கு அறநிலைய துறை விண்ணப்பத்திற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து அர்ச்சர்கள் மற்றும் பக்தர்களிடையே இது பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. அத்துடன் பலர் இந்து சமயநிலையை அறத்துறை கோயில்களில் ஜீயரை தேர்ந்தெடுப்பதில் தலையிடக்கூடாது என்று தெரிவித்தனர்.
ஈஷா நிறுவனர், சத்குரு ஜக்கி வாசுதேவ் ”கோயில் அடிமை நிறுத்து” என்ற கோரிக்கையை முன்வைத்து, இது தொடர்பாக கருத்துகளை தெரிவித்து வருகிறார். இந்நிலையில் இந்த கருத்து தொடர்பாக தமிழ்நாட்டு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 'த இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இதற்கு பதிலளித்துள்ளார். அதில், "இது முட்டாள்தனமான யோசனை. சமூகத்தில் இருக்கும் நல்லிக்கணத்தை உடைக்க வேண்டும் என்ற நிலையில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஜக்கி வாசுதேவ் எப்போதும் விளம்பரம் தேடும் நபர். இவர் இதை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கிறார். கடவுள் மீது அதிக பற்று உடையவர் என்றால் எதற்காக சிவராத்திரி டிக்கெட்களை 5 லட்சம், 50 ஆயிரம், 5ஆயிரம் என விற்பதற்கு காரணம் என்ன?
இது ஒரு ஆன்மீகவாதி செய்யும் செயலா? அவர் மதம் மற்றும் ஆன்மீகத்தை தனது வர்த்தக நோக்கத்திற்காக பயன்படுத்தி வருகிறார். கோயில்களை பக்தர்களிடம் கொடுக்க வேண்டும் என்றால் யாரிடம் கொடுப்பது. யார் அந்த பக்தர்கள்? உள்ளூரில் இருக்கும் பக்தரா? அவருக்கு என்ன தகுதி இருக்கவேண்டும்? உதாரணமாக மதுரையில் பிறந்த பக்தர் ஒருவர் சென்னையில் இருந்தால் மதுரை மீனாட்சியம்மன் கோயிலை நிர்வாகிக்க முடியுமா? இதற்காக தனியாக ஒரு அமைப்பு உருவாக்க வேண்டும் என்றால் அதை யார் கட்டுப்படுத்துவது? அந்த அமைப்பிற்கு நபர்களை தேர்வு செய்வது எப்படி?" என்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தாத்தா பிடி ராஜன் மெட்ராஸ் மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தபோது இந்து சமய அறநிலையை துறையை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தார். அதேபோல சபரிமலை ஐயப்பன் கோயில் தீ விபத்தின்போது, ஐயப்பன் சிலை சேதம் அடைந்தபோது அந்த கோயிலுக்கு பிடி ராஜன் புதிய சிலையை வழங்கினார். அந்த சிலை தற்போதும் ஐயப்பன் கோயிலில் உள்ளது.
முன்னதாக தமிழ்நாட்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஜக்கி வாசுதேவ் மீது உள்ள புகார்கள் முறையாக விசாரிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். குறிப்பாக கோவையிலுள்ள ஈஷா யோகா மையம் தொடர்பான புகார்கள் விரைவாக விசாரிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.