ஊரே கூடி நின்று வேடிக்கைப் பார்த்த ஆணவக்கொலை! தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்!
22 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டையே உலுக்கிய முருகேசன் – கண்ணகி ஆணவக்கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

22 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டையே உலுக்கிய முருகேசன் – கண்ணகி ஆணவக்கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2003ஆம் ஆண்டு கடலூர் விருதாசலம் அருகே சாதி எதிர்ப்பு திருமணம் செய்த கண்ணகி – முருகேசன் ஆகியோர் ஆணவக்கொலை செய்யப்பட்டனர். குப்பந்த்தம் முந்திரிக்காடு பகுதியில் கண்ணகி, முருகேசன் ஆகியோரின் மூக்கு, காதுகளில் விஷம் ஊற்றி கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை ஊரே கூடி நின்று வேடிக்கை பார்த்தது.
இந்த கொலை நடந்த ஓராண்டுக்கு பிறகே வெளி உலகிற்கு தெரியவந்தது.
கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டியனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
உயர்நீதிமன்றம் வழங்கிய தண்டனையை எதிர்த்து குற்றவாளிகளில் 8 பேர் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் குற்றவாளிகளான கந்தவேல், ஜோதி, மணி உள்ளிட்டோர் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தங்களுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் 2022 தீர்ப்பை எதிர்த்து எட்டு குற்றவாளிகள் தாக்கல் செய்த மேல்முறையீடுகளை தள்ளுபடி செய்து நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற்றும் நீதிபதி பி.கே. மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.
முருகேசன் வேதியியல் பொறியியலில் பட்டதாரி மற்றும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். கண்ணகி வணிகவியல் பட்டதாரி மற்றும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். இந்த ஜோடி மே 5, 2003 அன்று ரகசியமாக திருமணம் செய்து கொண்டது.
இந்தத் திருமணம் குறித்து கண்ணகியின் குடும்பத்தினருக்குத் தெரிய வந்ததும், அவர்கள் ஜூலை 7, 2003 அன்று, ஊரை வெளியேற முடிவு செய்தனர்.
இதையறிந்த பெண்ணின் குடும்பத்தார் அவர்கள் இருவரையும் பிடித்து சினிமாவில் வருவது போன்று விஷம் குடிக்கச் செய்தனர். இதனால் அந்த ஜோடி அப்பட்டமாக உயிரிழந்தனர். பின்னர் அவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் நடந்த முதல் "கெளரவக் கொலை" வழக்குகளில் ஒன்றாக இந்த ஜோடியின் கொலை கருதப்பட்டது. காவல்துறையின் விசாரணை தோல்வியடைந்ததை அடுத்து, இந்த வழக்கின் விசாரணை சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.
2021 ஆம் ஆண்டில், விசாரணை நீதிமன்றம் கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டியனுக்கு மரண தண்டனை விதித்தது. மேலும் அவரது தந்தை உட்பட 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. 2022 ஆம் ஆண்டில், சென்னை உயர் நீதிமன்றம் மருதுபாண்டியனின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. இதையடுத்து அவரது தந்தை உட்பட ஒன்பது பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. இரண்டு பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இன்று, உச்ச நீதிமன்றமும் முருகேசனின் பெற்றோருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. முருகேசனின் பெற்றோருக்காக வழக்கறிஞர் ராகுல் ஷியாம் பண்டாரி ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.





















