M.K.Stalin: படிப்பு மட்டும்தான் பிரிக்கமுடியாத சொத்து - நெகிழ்ச்சி பொங்க பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
சமத்துவ இந்தியாவை காக்கவேண்டியது மாணவர்களின் பொறுப்பு என சிற்பி திட்டம் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
சமத்துவ இந்தியாவை காக்கவேண்டியது மாணவர்களின் பொறுப்பு என சிற்பி திட்டம் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சென்னை பெருநகர காவல் துறையின் சிற்பி திட்டம் நிறைவு விழாவில் அவர் பேசுகையில், ”கல்வி மட்டுமே உங்களிடமிருந்து பிரிக்க முடியாத சொத்து. நீங்கள் அனைவரும் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, கல்லூரிப் படிப்பை தொடரவேண்டும். சிறுவர்களை சிறுவயது முதலே நல்வழிப்படுத்த சிற்பி திட்டம் பயன்படுகிறது” என கூறினார்.
மேலும் அவர், ”மாணவர்கள் படிப்பில் முதலிடத்தைப் பொறுவதைப் போல, ஒழுக்கத்திலும் முதலிடத்தைப் பெறவேண்டும். சமூகத்தின் பாடத்தை படிப்பதன் மூலம், சமத்துவம் மற்றும் சுயமரியாதையை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். சிறார் குற்றங்களை கட்டுப்படுத்த தமிழ்நாடு காவல்துறை சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. தரமான கல்வி வழங்குவதில் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது. கல்வித்துறையில் மகத்தான சாதனையை திராவிட மாடல் அரசு செய்து வருகிறது” என்றார்.
“மேலும் அவர், மாணவர்கள் எந்தவிதமான போதைப்பழக்கத்திற்கும் அடிமை ஆககூடாது. மாணவர்களைக் கண்டவுடன் எனது பள்ளிப்பருவம் நினைவுக்கு வருகிறது. நான் முதல்வன், இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், காலை சிற்றுண்டி உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இந்த வரிசையில் மாணவர்களை நல்வழிப்படுத்த சிற்பி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. எல்லோருக்குமான இந்தியாவை உருவாக்க நினைத்த முன்னாள் பிரதமர் நேரு பெயரில் உள்ள அரங்கத்தில் நடைபெறுகிறது” என்றார்.
மேலும் அவர், ”இந்தியாவில் அனைத்து துறையிலும் முதல் இடம் வகிக்கும் மாநிலம் என்று பேசும் அளவிற்கு வளர்ந்து வருகிறோம். பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டம் திராவிட மாடல் ஆட்சியின் மகத்தான திட்டம். வயிற்றுப்பசியை தீர்த்து விட்டால் அறிவுப் பசியை தீர்த்துக்கொள்ளலாம் என்ற நோக்கத்தில் கொண்டுவரப்பட்டது தான் காலைச் சிற்றுண்டித்திட்டம்” என கூறினார்.
மேலும், சிற்பி திட்டம் குறித்து அவர் பேசுகையில், “ சென்னை மாநகராட்சியில் உள்ள 100 பள்ளிகளில் தலா 50 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து மொத்தம் 5 ஆயிரம் மாணவர்கள் சிற்பி திட்டத்தின் மூலம் சிற்பிகளாக உருவாக்கப்பட்டுள்ளனர் என்றார். மேலும், கராத்தே, போக்குவரத்து விதிமுறைகள், நல் ஒழுக்கங்கள் கற்பிக்கப்பட்டுள்ளன. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பயிற்சியில் வழங்கப்படும் பயிற்சிகள் சிற்பி திட்டத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டு பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் உட்பட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.