57 ஆண்டுகளுக்கு பின்பு கோயிலுக்கு வந்தடைந்த களவுபோன திருஞானசம்பந்தர் சிலை!
சீர்காழி அருகே காணாமல் போன திருஞானசம்பந்தர் சிலை 57 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்டு கோயிலில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட, தமிழக கோயில்களுக்கு சொந்தமான 10 சிலைகள், கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு ஜீன் 4 ம் தேதி கொண்டு வரப்பட்டன. தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட புராதன சிலைகள் குறித்து, சிலை கடத்தல் தடுப்பு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன்படி, அமெரிக்கா, ஆஸ்திரேலிய அருங்காட்சியகங்களில் இருந்த மீட்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 10 உலோக சிலைகள், டெல்லியில் உள்ள மத்திய தொல்பொருள் துறை வசம் ஒப்படைக்கப்பட்டன.
கடந்த 1-ம் தேதி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், மீட்கப்பட்ட 10 சிலைகளையும் தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவிடம் மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி ஒப்படைத்தார். இதையடுத்து, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர்கள் ராஜாராம், அசோக் நடராஜன் ஆகியோர் அந்த சிலைகளை டெல்லியில் இருந்து ரயில் மூலமாக ஜீன் 4 ம் தேதி சென்னை கொண்டு வந்தனர். பின்னர், தென்காசி மாவட்டம் அத்தாள மூன்றீஸ்வரர் கோயிலின் 2 துவார பாலகர் சிலை, தஞ்சை மாவட்டம் புன்னைநல்லூர் கைலாசநாதர் கோயில் நடராஜர் சிலை, நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி நரசிங்கநாதர்கோயில் கங்காளமூர்த்தி, நந்திகேஸ்வரர் சிலை, அரியலூர் மாவட்டம் சுத்தமல்லிவரதராஜ பெருமாள் கோயில் விஷ்ணு, ஸ்ரீதேவி சிலைகள், தஞ்சை மாவட்டம் தீபாம்பாள்புரம் வன்மீகநாதர் கோயில்சிவன் பார்வதி சிலை, மயிலாடுதுறை மாவட்டம் சாயாவனேஸ்வரர் கோயில் சம்பந்தர் சிலை, அடையாளம் தெரியாத நடனமிடும் சம்பந்தர் சிலை ஆகிய 10 சிலைகளை பலத்த பாதுகாப்புடன் கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டன.
அதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சாயாவனம் கிராமத்தில் அமைந்துள்ள சாயாவனேஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான ஞானசம்பந்தர் ஐம்பொன் சிலை கடந்த 1965 ஆம் ஆண்டு கோயிலில் இருந்து திருடப்பட்டு, கடத்தல் காரர்களால் பாண்டிச்சேரியில் இருந்து ஆஸ்திரேலியா நாட்டிற்கு கடத்தப்பட்டு, அங்குள்ள அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்து விசாரணை செய்து கடத்தப்பட்ட 2 அடி உயரம் கொண்ட திருஞானசம்பந்தர் சிலை சாயவனம் கோவிலுக்கு சொந்தம் என்பதனை ஆவணங்களின் அடிப்படையில் உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் இருந்து 57 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்டு மீண்டும் சொந்த ஊருக்கு எடுத்துவந்த சிலை தடுப்பு பிரிவு போலீசார் சாயவனம் கோயில் நிர்வாகத்திடம் நேற்று இரவு ஒப்படைத்தனர்.
அதனை அடுத்து 57 ஆண்டுகளுக்குப் பிறகு காணாமல் போன திருஞானசம்பந்தர் ஐம்பொன் சிலை மீண்டும் கோயிலுக்கு வந்ததை தொடர்ந்து, கோயில் நிர்வாகம் சார்பில் கோயில் குருக்கள் மஞ்சள், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட அபிஷேகம் பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் மேற்கொண்டு மகா தீபாராதனை காண்பித்து கோயிலில் வைத்தனர். 57 ஆண்டுக்கு முன்னர் காணமல் போன சிலையை காண திரளான பக்தர்கள் ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டு தரிசனம் செய்தனர்.