“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Chennai Metro Rail : சென்னை மெட்ரோ இரயில் மட்டுமல்ல, சென்னை மாநகரில் காணும் உட்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்கள் எல்லாவற்றிலும் தி.மு.க அரசின் பெயர்தான் இருக்கும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம்
சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் வருகிற 11ஆம் தேதி பூந்தமல்லி - வடபழனி இடையிலான மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், திராவிட மாடல் அரசால் கட்டி முடிக்கப்பட்ட பூந்தமல்லி - போரூர் – வடபழனி இடையேயான சென்னை மெட்ரோ வழித்தடம் அக்டோபர் 11-ஆம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், அதுகுறித்த சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். சென்னை மெட்ரோ இரயில் திட்டம் தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில், நான் துணை முதலமைச்சராக இருந்தபோது தொடங்கப்பட்டது. இதற்காக, அப்போது நான் ஜப்பான் சென்று JICA-வின் நிதியைப் பெற்று வந்து இந்தத் திட்டத்தை மேற்கொண்டோம்.
இதனையடுத்து சென்னை மெட்ரோ இரயிலின் முதற்கட்டப் பணிகள் நிறைவுபெற்றபோது, விமான நிலையம் – சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் – கோயம்பேடு புறநகர்ப் பேருந்து முனையம் எனச் சென்னையின் முக்கியமான போக்குவரத்து மையங்கள் இணைக்கப்பட்டு, சென்னையின் வளர்ந்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு மாமருந்தாகவும், மாநகரின் பொதுப் போக்குவரத்து அமைப்பில் மிகப் பெரும் மைல்கல்லாகவும் இது அமைந்தது. தற்போது இத்தடத்தில் விம்கோ நகர் வரை இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
மழை வெள்ளத்தில் உதவிய மெட்ரோ ரயில்
2015-ஆம் ஆண்டு சென்னைப் பெருவெள்ளத்தின்போது சாலைகள் மூழ்கித் துண்டிக்கப்பட்ட நிலையில், இலட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மெட்ரோ மூலமாகப் பயணித்தபோது சென்னைக்கு மெட்ரோ இரயிலின் தேவை அனைவராலும் உணரப்பட்டது. இதனையடுத்து, சென்னை மெட்ரோ இரயிலின் இரண்டாம் கட்டப் பணிகள் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பல்வேறு காரணங்களால் சுணக்கம் கண்டிருந்த நிலையில், 2021-ஆம் ஆண்டு நமது திராவிட மாடல் ஆட்சி அமைந்ததும் அதனை விரைவுபடுத்தினோம். இதற்கான ஒன்றிய அரசின் பங்களிப்பு நிதி மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக விடுவிக்கப்படாமல் இருந்த நிலையிலும், பணிகளைத் தொய்வின்றி மேற்கொண்டோம்.
2021-ஆம் ஆண்டு தொடங்கி, பிரதமர் அவர்களை நான் நேரில் சந்திக்கும்போதெல்லாம் இதுகுறித்த கோரிக்கை மனுவினை அளித்து, ஒன்றிய அரசின் பங்கினைக் காலதாமதம் செய்யாமல் விடுவிக்கத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையிலும், 2024 செப்டம்பர் நிலவரப்படி, மாநில அரசின் சொந்த நிதியிலிருந்து 11,762 கோடி ரூபாயும், வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் கடனுதவி மூலம் 6,802 கோடி என மொத்தம் 18,564 கோடி ரூபாயைச் செலவிட்டு நமது அரசில் இரண்டாம் கட்டப் பணிகளை நிறுத்தாமல் தொடர்ந்தோம்.
சென்னையில் மெட்ரோ ரயில் விரிவாக்கம்
சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்டப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தேன். சென்னை, மாதவரம் பால் பண்ணை அருகில், சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் வழித்தடம் 3-இன் சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகளில், மாதவரம் பால் பண்ணை மெட்ரோ நிலையத்திலிருந்து மாதவரம் நெடுஞ்சாலை மெட்ரோ நிலையம் வரை 1.4 கி.மீ நீளத்திற்கு சுரங்கம் தோண்டும் பணியினை 13-10-2022 அன்று தொடங்கி வைத்தேன்.
2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், கெல்லீஸ் முதல் தரமணி வரையிலான சுரங்க வழித்தடப் பகுதியில் கிரீன்வேஸ் சாலை மெட்ரோ நிலையம் முதல் அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையம் வரையிலான பணியில், 300 மீட்டர் அடையாறு ஆற்றிற்குக் கீழ் செல்லும் சவாலான வழித்தடப் பகுதி உட்பட மொத்தம் 1.218 கி.மீ தூரத்தைக் கடந்து அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையம் அருகில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெளிவரும் பணியினைப் பார்வையிட்டு, இப்பணியை மேற்கொண்டு வருவோரை ஊக்கப்படுத்தினேன். 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம், கிண்டி கத்திபாரா மேம்பாலத்தின் மேல், சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்டத்தில் கட்டுமானப் பொறியியலின் அதிசயமாக உருவாகி வரும் 108 அடி உயர மெட்ரோ பாலத்துக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டேன்.
பூந்தமல்லி – போரூர் – வடபழனி வழித்தடம் திறப்பு
வரும் 11-ஆம் நாள் மாண்புமிகு பிரதமர் அவர்களால் திறந்து வைக்கப்பட இருக்கும் பூந்தமல்லி – போரூர் – வடபழனி வழித்தடத்தை 2025-ஆம் ஆண்டு இறுதிக்குள்ளேயே திறந்திட அனைத்து முயற்சிகளையும் திராவிட மாடல் அரசில் செய்தோம். இருப்பினும், சிக்னல் அமைப்புக்கான ஒப்புதலை இரயில்வே வாரியம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் அது இயலாமல் போனது. அச்சூழலில் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து, திட்டமிட்டபடி நமது ஆட்சிக்காலத்தில் இதனைத் திறந்து வைக்க முடியவில்லை.
எனினும், ஒருவழியாகச் சென்னை மக்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த இந்த வழித்தடம் பயன்பாட்டுக்கு வர இருப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியும் மனநிறைவும் கொள்கிறேன். ஆண்டுக்கணக்கில் நான் சுமந்து வளர்த்தெடுத்த சென்னை மெட்ரோ இரயில் எனும் குழந்தை அடியெடுத்து வைப்பதில் தாய்மை உணர்வுடன் பெருமை கொள்கிறேன்.
சென்னை மெட்ரோ இரயில் - சரித்திரத்தில் எவராலும் மறைக்க முடியாது
சென்னை மெட்ரோ இரயில் நிறைவேற்றத்திலும் கழக அரசின் இடம் சரித்திரத்தில் எவராலும் மறைக்க முடியாத இடமாக நிலைபெற்றிருக்கும். சென்னை மெட்ரோ இரயில் மட்டுமல்ல, சென்னை மாநகரில் காணும் உட்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்கள் எல்லாவற்றிலும் தி.மு.க அரசின் பெயர்தான் இருக்கும். கழக ஆட்சிக்காலங்களில்தான் நவீன தமிழ்நாடு கட்டியெழுப்பப்பட்டது என்பதை ஒவ்வொரு மாவட்டத்திலும் உயர்ந்து நிற்கும் வளர்ச்சிச் சின்னங்கள் பறைசாற்றும்! என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்




















