Speaker Appavu: “இந்தியாவிலேயே ஒரே முதலமைச்சர்; அதிமுவினரை மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: சபாநாயகர்
அதிமுகவினரின் செயல்பாடுகளை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
அதிமுகவினரின் செயல்பாடுகளை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
அதிமுகவினர் அமளி
சட்டப்பேரவையில் முதலமைச்சர் பதிலுரையை ஏற்க மறுத்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய சபாநாயகர் “எதிர்க்கட்சி தலைவர் பேசும்போது முதலமைச்சர் 2 மணி நேரம், மதிய உணவு உண்ணாமல் கூட நாகரீகத்தோடு முழுமையாக இருந்தார். எதிர்க்கட்சி தலைவர் பேசுவதை நேரலையில் கொண்டு வர வேண்டும் என கேட்கிறார்கள். பேரவையில் கேள்வி நேரம் உள்ளிட்ட பல விஷயங்கள் நேரலை படிப்படியாக செய்யப்பட்டு வருகிறது. நானே பேசும் நேரம் முடிந்து விட்டது என்று சொன்னாலும் கூட முதலமைச்சர் இன்னும் கொஞ்சம் நேரம் கொடுங்கள் என்று எதிர்க்கட்சிகளுக்காக கூறியிருக்கிறார். அந்த அளவு ஜனநாயகத்தை பின்பற்றுகிறார். சட்டமன்றம் மாண்பை காக்க வேண்டும் என்பது கடமை. அவையில் பேசும் பேச்சுக்கள் மூலம் வெளியில் சட்ட ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் முதல்வர் தெளிவாக உள்ளார்.
இந்த அவை நடவடிக்கையில் இதுவரை ஏன் இதை செய்தீர்கள், ஏன் இதை செய்யவில்லை என்று கேட்காத இந்தியாவிலேயே ஒரே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். அந்த அளவிற்கு என்னையும் இந்த அவையையும் சுதந்திரமாக செயல்படவிட்டுள்ளார். இதற்கு இடையே எதிர்க்கட்சியினர் செய்யும் செயலை மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள் என்றுதான் நான் கருதுகிறேன். அவை நாகரீகத்தை ஒருபோது அவர்கள் ஏற்கவில்லை என்பது எனக்கு வருத்தமாக உள்ளது. நேரலைக்கு முதலில் நம்மை தயார்படுத்திக்கொண்டு பின்னர் நேரலை கொண்டு வரப்படும். எதிர்க்கட்சியினர் செயல் எனக்கு வேதனை, வருத்தம்” எனத் தெரிவித்தார்.
சட்டப்பேரவை
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதம் 20-ஆம் தேதி நடப்பு நிதியாண்டிற்கான, நிதிநிலை அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதற்கு அடுத்த நாள் வேளாண் துறைக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியானது. இதையடுத்து அலுவல் ஆய்வுக்குழுகூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில், மார்ச் 24-ம் தேதி முதல் ஏப்ரல் 21ம் தேதி வரை நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
அறிவிப்புகள்
மானியக்கோரிக்கை விவாதத்தின் போது தமிழக அரசு சார்பிலும், 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஸ்டாலினாலும் சட்டப்பேரவையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. குடும்பத்தலைவிகளுக்கு அக்டோபர் மாதம் முதல் ரூ.1000 உரிமைத்தொகை வழங்குவது, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய தொண்டு தொடர்பாக பள்ளி பாடநூலில் பாடம் இடம்பெறுவது, பள்ளி மாணவர்களுக்கான சிற்றுண்டி திட்டத்தை மாநில முழுவதும் விரிவுபடுத்துவது, காவல்துறையில் சட்ட ஆலோசகர் என்ற புதிய பணியிடம் உருவாக்கப்படும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக சென்னையில் 3,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதோடு, கிறிஸ்துவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு இடஒதுக்கீட்டிற்கான பலன் கிடைக்கச் செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியது உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்களும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன.
இன்றுடன் சட்டப்பேரவை நிறைவு:
இந்நிலையில், இன்று நடைபெறும் உள்துறைக்கான மானியக்கோரிக்கை விவாதத்துடன், தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைகிறது. இதில் காவல்துறை மேம்பாடு மற்றும் நலன் சார்ந்து பல்வேறு முக்கிய அறிவிப்புகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைதொடர்ந்து, சட்டப்பேரவை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படும்.