New DGP Swearing: புதிய சட்ட - ஒழுங்கு டிஜிபி ஆக பொறுப்பேற்றார் சங்கர் ஜிவால்.. கொடுத்த முதல் வாக்குறுதி இதுதான்..!
தமிழ்நாட்டின் புதிய சட்ட-ஒழுங்கு டிஜிபி ஆக சங்கர் ஜிவால் பொறுப்பேற்றார்.
தமிழ்நாட்டின் புதிய சட்ட-ஒழுங்கு டிஜிபி ஆக பொறுப்பேற்றார் சங்கர் ஜிவால். தமிழக சட்ட-ஒழுங்கு துறையின் 32வது டிஜிபி ஆக சங்கர் ஜிவால் பொறுப்பேற்றார். பதவியில் இருந்து இன்றுடன் ஓய்வு பெறும் சைலேந்திரபாபு, அதற்கான ஆவணங்களை சங்கர் ஜிவாலிடம் ஒப்படைத்தார். மயிலாப்பூர் அலுவலகத்தில் கையொப்பமிட்டு பொறுபேற்ரார் சங்கர் ஜிவாலுக்கு, மூத்த காவல்துறை அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
உறவை மேம்படுத்துவோம் - சங்கர் ஜிவால்:
பதவியேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய சங்கர் ஜிவால் “பொதுமக்கள் மற்றும் போலீஸ் இடையேயான உறவை மேம்படுத்த முயற்சிப்பேன். போலீசார் ஒரு துறையை சேர்ந்தவர்களாக செயல்பட்டு வருகின்றனர். வருங்காலத்தில் மனித உணர்வுகளுடன் சேர்ந்து போலீசார் தங்களது பணியை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். காவல் நிலையங்களுக்கு வரும் மக்களின் கோரிக்கைகளை முறையாக பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அது மேலும் சிறப்பாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். போலீசாரின் நலனுக்கான விடுமுறை, மருத்துவ பலன்கள் மற்றும் வீட்டு வசதி ஆகியவற்றை மேம்படுத்த உள்ளோம். சாலை விபத்துகள் அதிகம் ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து, அங்கு விபத்துகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம். சாலை விபத்து மரணங்கள் கடந்த 2 ஆண்டுகளில் குறைந்துள்ளது. அதை மேலும் குறைக்க பணிகள் முன்னெடுக்கப்படும். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொதுமக்களிடம் கோரிக்கைகளை பெறுவது, அவர்களது புகார்களின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பதை அறிவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சரின் எதிர்பார்ப்பின் பேரில் காவல்துறை சிறப்பாக செயல்படும்” என உறுதியளித்தார்.
யார் இந்த சங்கர்ஜிவால்?
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அல்மோரா நகரத்தில் 1965ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ந் தேதி பிறந்தவர் சங்கர்ஜிவால். இவர் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார். மெக்கானிக்கல் பொறியயில் பட்டதாரியான இவர் ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா எனப்படும் செயில் மற்றும் பெல் நிறுவனங்களில் படிப்பை முடித்த பிறகு சிறிது காலம் பணியாற்றினார்.
பின்னர், குடிமைப்பணி தேர்வின் பின்பு தன்னுடைய கவனத்தை திசைதிருப்பிய சங்கர்ஜிவால், 1990ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற்று ஐ.பி.எஸ். அதிகாரியாக பொறுப்பேற்றார். தமிழ்நாடு கேடர் ஐ.பி.எஸ். அதிகாரியாகவே அவர் தேர்வானார். 1993ம் ஆண்டு முதல் பல்வேறு முக்கிய உயர் பொறுப்புகளை சங்கர்ஜிவால் வகித்து வருகிறார்.
எஸ்.பி., கமிஷனர், டி.ஐ.ஜி., ஐ.ஜி.
ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்ற பிறகு ஏ.எஸ்.பி.யாக மன்னார்குடியிலும், சேலத்திலும் பணியாற்றினார். அதன்பின்பு, சேலம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்தார். அதற்கு பிறகு தென்மண்டல போதை பொருள் தடுப்ப பிரிவு மண்டல தலைவராக 2004 முதல் 2006ம் ஆண்டு வரை பொறுப்பு வகித்தார். இதையடுத்து, திருச்சி காவல் ஆணையராக பொறுப்பு வகித்தார். பின்னர் உளவுப்பிரிவு துறை டி.ஜி.ஜி.யாக நியமிக்கப்பட்ட சங்கர்ஜிவால் அதே துறையின் ஐ.ஜி.யாகவும் நியமிக்கப்பட்டார். பின்னர், பதவி உயர்வு பெற்ற சங்கர்ஜிவால் ஏ.டி.ஜி.பி.யாக சிறப்பு அதிரடிப்படைக்கு பொறுப்பு வகித்தார்.
காவல் ஆணையர் டூ புதிய டி.ஜி.பி.
தமிழ்நாடு அரசின் பல்வேறு முக்கிய காவல் உயர் பொறுப்புகளை வகித்த சங்கர்ஜிவால் 8 ஆண்டுகள் அயல்பணியாக மத்திய அரசு பணிக்கு சென்றார். பின்னர், மீண்டும் தமிழ்நாட்டிற்கு திரும்ப அழைக்கப்பட்ட சங்கர்ஜிவால் அதிரடிப்படை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். மேலும், சென்னை உளவுத்துறை ஐ.ஜி.யாகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்த பிறகு, கடந்த 2021ம் ஆண்டு சென்னை மாநகர காவல் ஆணையராக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார். 3 ஆண்டுகள் சென்னை காவல் ஆணையராக பணியாற்றிய சங்கர்ஜிவால் தற்போது புதிய டி.ஜி.பி.யாக பொறுப்பேற்றுள்ளார்.