இந்த மாசத்தோட கடைசி முகூர்த்தம்! தமிழ்நாட்டில் காய்கறிகள், பூக்கள் விற்பனை படுஜோர் - வியாபாரிகள் ஹாப்பி
செப்டம்பர் மாதத்திற்கான கடைசி முகூர்த்த நாட்கள் நாளை மறுநாளுடன் நிறைவு பெறுவதால் காய்கறிகள் மற்றும் பூக்கள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் பொதுவாக சுபகாரியங்கள் நல்ல நாட்களில் நடத்தப்படுவது வழக்கம். எந்த மதத்தினராக இருந்தாலும் திருமணம் உள்ளிட்ட எந்த ஒரு காரியமாக இருந்தாலும் நல்ல நாட்களில் நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், ஆவணி மாதத்தில் வரும் முகூர்த்த நாட்களில் அதிகளவு திருமணங்கள் உள்ளிட்ட சுபகாரியங்கள் நடைபெறுவது வழக்கம். ஏனெ்னறால், புரட்டாசி மாதத்தில் திருமணங்கள் உள்ளிட்ட சுபகாரியங்கள் பெரியளவில் செய்யமாட்டார்கள்.
ஆவணி மாத கடைசி முகூர்த்த நாட்கள்:
நடப்பாண்டிற்கான ஆவணி மாதம் வரும் செப்டம்பர் 16ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த ஆவணி மாதத்திற்கான கடைசி இரண்டு முகூர்த்த நாட்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் வருகிறது. இதன்படி, அடுத்த ஒரு மாத காலத்திற்கு திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் செய்யமாட்டார்கள். நாளை மற்றும் நாளை மறுநாள் வரும் முகூர்த்தம் வளர்பிறை முகூர்த்தம் என்பதால் இந்த இரண்டு நாட்களிலும் திருமணங்கள் உள்பட ஏராளமான சுபகாரியங்கள் தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது.
களைகட்டும் வியாபாரம்:
ஆவணி மாத கடைசி முகூர்த்த நாட்கள் அடுத்தடுத்து வருவதால் கடைகளில் வழக்கத்தை விட பூக்கள், காய்கறிகள் மற்றும் பழங்களின் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுபமுகூர்த்த நாட்கள் என்பதால் மாலைகள் முன்கூட்டியே ஆர்டர்கள் பெறப்பட்டால் பூக்கடைகளில் மாலைகளின் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. விசேஷங்களுக்காக காய்கறிகளின் விற்பனையும் ஜோராக நடைபெறுவதால் சந்தைகளில் வழக்கத்தை விட கூடுதலாக காய்கறிகள் விற்பனை நடைபெற்று வருகிறது.
பெரும்பாலான திருமண மண்டபங்கள், அரசு சமுதாயக் கூடங்கள் சுபகாரியங்களுக்காக ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு களைகட்டி காணப்படுகிறது. தமிழ்நாட்டின் மிகவும் முக்கியமான சந்தைகளான சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை, திருச்சி சந்தை ஆகியவற்றில் விநாயகர் சதுர்த்தி முதலே காய்கறிகள் உள்ளிட்டவற்றின் விற்பனை தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது மேலும் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்ட தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்கள் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
தொடர் விடுமுறை:
மேலும், கோவை, மதுரை, சேலம், நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பூக்கள் மற்றும் காய்கறிகள் சந்தை களைகட்டி காணப்படுகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான சுபமுகூர்த்த நாட்களில் நடைபெறும் விசேஷங்களில் சைவ உணவுகளே பரிமாறப்படுவதால் வரும் 2 நாட்களில் இறைச்சி விற்பனை வழக்கத்தை விட குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் புரட்டாசி மாதத்தில் பெரும்பாலோனார் அசைவம் சாப்பிட மாட்டார்கள் என்பதால் இந்த வாரம் இறைச்சி விற்பனை வழக்கம்போல இருக்கும் என்றும் சில வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும், வரும் செவ்வாய்கிழமை மிலாடி நபி அரசு விடுமுறை என்பதாலும் நாளை மற்றும் நாளை மறுநாள் முகூர்த்த நாட்கள் என்பதால் பேருந்துகளில் முன்பதிவும் அதிகளவில் நடைபெற்றுள்ளது.