”நீங்க இன்னும் கொஞ்ச நாள் சிறையில் இருங்க” - ஜெயராஜ்-பென்னிக்ஸ் வழக்கு எஸ்.ஐ ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு !
சாத்தான்குளம் விசாரணை கைதிகள் கொலைச் சம்பவத்தின் குற்றவாளி ரகு கணேஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெய்ராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது விசாரணையின்போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் மரணம் அடைந்தனர். இந்த வழக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவல்துறை விசாரணையின் தந்தை மகன் என இருவரும் இறந்தது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ ரகுகணேஷ், எஸ்.ஐ பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன், தாமஸ்பிரான்சிஸ் உள்பட 10 பேர் மீது கொலை வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு இறந்தார். மீதமுள்ள 9 பேரும் தற்போது மதுரை சிறையில் இருந்து வருகின்றனர்.

இந்தச் சூழலில் எஸ்.ஐ ரகு கணேஷ் இந்த வழக்கு தொடர்பாக ஜாமீன் மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அதை கொடைகால விடுமுறை அமர்வு முன்பு அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இது நீதிபதிகள் வினித் சரண் மற்றும் பி.வி.காவை கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ரகு கணேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்த சம்பவம் நடந்த போது ரகு கணேஷ் காவல் நிலையத்தில் இல்லை. மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் கொரோனா பாதிப்பால் இறந்துவிட்டார். ஆகவே இந்த ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.
இதை கேட்ட நீதிபதிகள் அமர்வு, "கொரோனா ஊரடங்கை மீறியதற்கு இருவர் கைது செய்யப்பட்டு விசாரணையின் போது அவர்கள் இறந்த வழக்கு இது. இந்த வழக்கில் உள்ள சாட்சியங்களின் படி இந்த மரணத்திற்கும் ரகு கணேஷிற்கும் தொடர்பு உள்ளது என்று தெரிகிறது. இது ஒரு மோசமான வழக்கு. இந்த வழக்கில் நீங்கள் இன்னும் சில நாட்கள் சிறையில் இருக்க வேண்டும்" எனக் கூறினார்கள்.
அத்துடன் இந்த ஜாமீன் மனுவை அவசர வழக்காகவும் ஏற்க மறுத்தனர். இந்த மனு மீதான விசாரணையை வரும் ஜூன் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். ஏற்கெனவே ரகு கணேஷ் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து தற்போது அவர் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளார். முன்னதாக இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மாவட்ட எஸ்பி விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஒரு அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.





















