சங்கர் ஜிவாலுக்கு டிஜிபியாக பதவி உயர்வு: சென்னை காவல் ஆணையராகவே தொடர்வார்
டிஜிபியாக பதவி உயர்வு பெற்றாலும் கூட அவர் சென்னை பெருநகர காவல் ஆணையராகவே பணியில் தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை காவல் ஆணையராக இருக்கும் சங்கர் ஜிவால் உள்பட ஐந்து பேருக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
டிஜிபியாக பதவி உயர்வு பெற்றாலும் கூட அவர் சென்னை பெருநகர காவல் ஆணையராகவே பணியில் தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை காவல் ஆணையராக கடந்த மே மாதம் சங்கர் ஜிவால் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் அண்மையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உடல்நலம் சீரானதைத் தொடர்ந்து அவர் நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
அவருக்கு சென்னை மாநகர காவல்துறையினர் பூங்கொடுத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். விரைவில் பணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சங்கர் ஜிவால் வீடு திரும்பிய நிலையில், அவருக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஏடிஜிபி ரேங்க்கில் இருந்த அவர் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர், சென்னை காவல் ஆணையராகவே தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சங்கர் ஜிவாலுடன் மேலும் நான்கு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் டிஜிபியாக பதவி உயர் அளிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் விவரம் வருமாறு:
வீட்டுவசதி கழகத்தின் ஏடிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் இனி அத்துறையில் டிஜிபியாக செயல்படுவார்.
குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை ஏடிஜிபியாக உள்ள அப்பாஸ் குமார், டிஜிபியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார். இனி அவர் அத்துறையின் டிஜிபியாக செயல்படுவார்.
உளவுத்துறை ஏடிஜிபி டி.வி.ரவிச்சந்திரன் டிஜிபியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் டிஜிபியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஏடிஜிபி மகேஷ் குமார் சென்னை அமலாக்கத்துறையின் ஏடிஜிபியாகவும், ஐஜி கபில் குமார் சென்னை அமலாக்கத்துறையின் ஐஜியாகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வினித் தேவ் வான்கடே காவல்துறை தொழில்நுட்பப் பிரிவு ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அமரேஷ் புஜாரி, சென்னை சைபர் க்ரைம் பிரிவின் ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஜி.வெங்கடரமணன், சென்னை போலீஸ் தலைமையகத்தின் ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
காவல்துறை நிர்வாகம் ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் கே.சங்கர்.
அதிமுக ஆட்சியில் முக்கிய பதவிகள் ஏதும் வழங்கப்படாமல் ஒரங்கட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளில் ஒருவரான சங்கர் ஜிவால், திமுக ஆட்சி அமைந்த பின்னர் சென்னை காவல்துறை ஆணையாக நியமிக்கப்பட்டார். தற்போது அவர் டிஜிபியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார். அதிமுகவால் ஓரங்கட்டப்பட்ட இறையன்பு ஐஏஎஸ் தான் திமுக ஆட்சி அமைந்தவுடன் தலைமைச் செயலராக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.