சிக்கலில் பாஜகவின் நயினார் நாகேந்திரன்? ரூ.4 கோடி விவகாரம், ”தேர்தலுக்காக கைமாறிய 20 கிலோ தங்கம்”
Nayinar Nagendran: நாடாளுமன்ற மக்களவை தேர்தலின்போது பிடிபட்ட ரூ.4 கோடி விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Nayinar Nagendran: தேர்தலின்போது பிடிபட்ட ரூ.4 கோடி விவகாரத்தில், தங்கக் கட்டிகள் விற்பனை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
ரூ.4 கோடி விவரம் - தங்கக் கட்டிகள் விற்பனை
அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலின்போது, நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியரிடம் இருந்து, கடந்த ஏப்ரல் 6ம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் வைத்து ரூ.4 கோடி கணக்கில் காட்டப்படாத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட வழக்கில், தங்கக் கட்டிகளை விற்று பணம் தந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ஹவலா இடைத்தரகர்கள் என கூறப்பட்ட பங்கஜ் மற்றும் சூரஜ் ஆகியோரிடம் நேற்று 11 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதனிடையே, தமிழ்நாடு பாஜக நிர்வாகி கோவர்தனின் ஓட்டுனர் விக்னேஷிடம், செல்போனில் அடிக்கடி சூரஜ் பேசியதும் தெரிய வந்தது. இதையடுத்து, விசாரணையில் ரூ.4 கோடி விவகாரத்தில் சூரஜ்-க்கு தொடர்பு இருப்பது தெரிய வந்ததும் அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டது.
கைமாறிய 20 கிலோ தங்கம்?
விசாரணையின் முடிவில் ஹவாலா இடைத்தரகர்கள் மூலம் 20 கிலோ தங்கக் கட்டிகளை புதுச்சேரி எம்.பி., செல்வகணபதி விற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பண பரிமாற்ற விவகாரத்தில் தீபக் லால்வாணிக்கு தொடர்பு இல்லை எனவும் தெரிய வந்துள்ளது. அதன்படி, புதுச்சேரி எம்.பி., செல்வகணபதி தன்னை தொடர்பு கொண்டு 20 கிலோ தங்கக் கட்டிகளை விற்று தரக்கூறியதாகவும், 15 கிலோ தங்கக் கட்டிகளை சவுகார் பேட்டை என்.எஸ்.சி., போஸ் சாலையில் உள்ள நகைக்கடைகளில் விற்றுத் தந்ததாக சூரஜ் வாக்குமூலம் அளித்துள்ளார். தேர்தல் செலவுக்காக தான் தங்கக் கட்டிகளை விற்றுக் கொடுத்ததாகவும், 5 கிலோ தங்கக் கட்டிகளை புதுச்சேரியிலேயே செல்வகணபதி விற்றுவிட்டதாகவும், ரூ. 1 கோடி வரை பணப் பறிமாற்றம் செய்து கொடுத்ததாகவும் சூரஜ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
3 மாத அவகாசம் கேட்ட பாஜக எம்.பி.,
ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் நேற்று விசாரணைக்கு ஆஜராகும்படி, புதுச்சேரி பாஜக எம்.பி., செல்வணபதிக்கு சிபிசிஐடி போலீசார் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். ஆனால், அவர் நேற்று விசாரணைக்கு ஆஜாராகாமல், தனக்கு 3 மாதங்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என கடிதம் எழுதி உள்ளார். இதனிடையே, சூரஜுடன் தொடர்பில் இருந்த மேலும் சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.