Robo Shankar: "கணவனுக்காக கடைசி நடனம்” விமர்சித்த நெட்டிசன்கள்! நெத்தியடி பதில் கொடுத்த பெரியார் சரவணன்
ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தில் அவரது மனைவி பிரியங்கா நடனமாடியது சமூக வலைதளங்களில் பேசிபொருளாகி வரும் சூழலில் அவருக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தில் அவரது மனைவி பிரியங்கா நடனமாடியது சமூக வலைதளங்களில் பேசிபொருளாகி வரும் சூழலில் அவருக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ள நிலையில் எழுத்தாளர் பெரியார் சரவணன் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது.
ரோபோ சங்கர்:
தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் ரோபோ சங்கர். உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த (செப்டம்பர் 18) சென்னை ஜெம் மருத்துவமனையில் உயிரிழந்தார். நகைச்சுவை மட்டும் இன்றி ஆரம்ப காலங்களில் மேடை நிகழ்ச்சிகளிலும் ரசிகர்களை சந்தோச படுத்திய ரோபோ சங்கரின் திடீர் மரணம் ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது என்றே சொல்லவேண்டும். சினிமா மட்டும் இன்றி தனிப்பட்ட வாழ்க்கையிலும் அனைவரிடமும் மிகுந்த அன்போடு பழகக் கூடிய ரோபோ சங்கரின் மரணத்திற்கு பல்வேறு தரப்பிலும் இருந்தும் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது சமூக வலைதள பக்கத்தில் ரோபோ சங்கருக்கு இரங்கல் தெரிவித்தார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரோபோ சங்கர் வீட்டிற்கு நேரடியாக சென்று மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார். சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சீமான், அண்ணாமலை, பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனார்.
நடனமாடிய மனைவி:
இந்த நிலையில் நேற்று (செப்டம்பர் 20) நடைபெற்ற ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தில் அவரது மனைவி பிரியங்கா நடனம் ஆடி தன்னுடைய சோகத்தை வெளிப்படுத்தினார். தற்போது அவர் நடனமாடியது தான் சமூக வலைதளங்களில் பேசு பொருளானது. அது எப்படி தனது கணவன் இறப்பின் போது ஒரு பெண் நடனமாடுவது, இது நம் கலாச்சாரம் இல்லை என்று சிலர் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஊழிக் கூத்து:
அதே நேரம் அவருக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு குரலும் எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக பெரியார் சரவணன் என்பவர் சமூக வலைதளங்களில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மேடை கலை நிகழ்ச்சிகளில், ஒன்றாக பங்கு பெரும் போது, இருவரும் காதலித்துத் திருமணம் செய்துக் கொண்டார்கள். தன் நடனத்தால் காதல் வயப்பட்ட கணவருக்கு, அதே நடனத்தின் மூலமே இறுதி அஞ்சலியும் செலுத்தி இருக்கிறார் அவர் மனைவி.
இதை விட சிறப்பாக ஒரு கலைஞனை வழியனுப்பி விட முடியாது. மயானத்திற்கு பெண்கள் வரக் கூடாது என்று, முண்டச்சியாய் மூலையில் உட்கார வைத்தேப் பழக்கப்பட்ட, பொது புத்தியால் வார்க்கப் பட்டவர்கள், அய்யோ புருசனை சாகக் கொடுத்து விட்டு பொண்டாட்டி டான்ஸ் ஆடலாமா என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு தோழமையோடு சொல்லிக் கொள்ள... தனது இழப்பை, தனது சோகத்தை, தனது ஆற்றாமையை, அதுக் கொடுக்கும் உணர்ச்சிப் பிரவாகத்தை ஆடித் தீர்த்திருக்கிறார் அவர் மனைவி. இதுதான் உழைக்கும் மக்கள் பண்பாடு.

இதற்குப் பெயர் தான் ஊழிக் கூத்து. தன் கணவன் மேல் கொண்டக் காதலை இதைவிட உயர்வாக வெளிப்படுத்த எந்தக் கம்பனாலும் முடியாது, எந்தக் கொம்பனாலும் முடியாது”என்று கூறியுள்ளார். இவரது இந்த பதிவு தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.






















