(Source: ECI/ABP News/ABP Majha)
Ramzan 2023: தென்பட்டது பிறை.. இன்று முதல் 30 நாட்களுக்கு ரமலான் நோன்பு.. முழு விவரம் இதோ..
இஸ்லாமியர்களின் புனித மாதமாக ரமலான் மாதம் அனுசரிக்கப்படுகிறது. ரமலான் பிறை நேற்று வானில் தென்பட்டதன் காரணமாக இன்று முதல் நோன்பு தொடங்குகிறது.
இன்று தொடங்குகிறது ரமலான் நோன்பு.. இஸ்லாமியர்களின் புனித மாதமாக ரமலான் மாதம் அனுசரிக்கப்படுகிறது. ரமலான் பிறை நேற்று வானில் தென்பட்டதன் காரணமாக இன்று முதல் நோன்பு தொடங்குகிறது. இன்று தொடங்கும் நோன்பு அடுத்த 30 நட்களுக்கு கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. புதன்கிழமை மாலை பிறை தென்படாததால் நேற்று தொடங்க இருந்த நோன்பு தொடங்கப்படவில்லை. நேற்று வானில் பிறை தோன்றி இன்று முதல் நோன்பு தொடங்கும் என தமிழக அரசின் தலைமை காஜி சலாவுத்தீன் முகமது ஆயுப் தெரிவித்தார்.
ரமலான் மாதத்தின் போது இஸ்லாமியர்கள் அனைவரும் நோன்பு இருப்பார்கள். கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், உடல்நிலை சரியில்லாதவர்கள், நோன்பு மேற்கொள்ள முடியாதவர்கள் நோன்பு இருக்க கட்டாயம் இல்லை. நோன்பு காலத்தில் சுய கட்டுப்பாடு, பசி, தாகம், புலன்களை அடக்குதல் ஆகியவை கற்றுக்கொள்ளப்படுகிறது. “நல்ல நம்பிக்கையுடன் அல்லாஹ்விடம் வெகுமதியை எதிர்பார்த்து எவர் நோன்பு இருக்கிறாரோ அவரது கடந்த காலப் பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான்” என்ற நபியவர்களின் கூற்றின்படி, நோன்பும், பெருநாளும் ஒவ்வொரு இஸ்லாமியருக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்திருக்கிறது.
நோன்பு இருக்கும் அனைவரும் தினமும் 5 முறை கட்டாயம் தொழுகை செய்ய வேண்டும் குறைந்தபட்சம் 3 முறை தொழுகை செய்ய வேண்டும். அதேபோல் சூரிய உதயத்திற்கு முன் மற்றும் சூரியன் மறைவிற்கு பின் மட்டுமே உணவு அருந்த வேண்டும், இடைப்பட்ட நேரத்தில் தண்ணீர் கூட அருந்த கூடாது. சூரிய உதயத்திற்கு முந்தைய உணவு ஷேரி என்றும் சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னர் உண்ணப்படும் உணவு இஃப்தார் என்றும் அழைக்கப்படுகிறது. நோன்பு காலத்தில் வன்முறை, கோபம், பொறாமை, பேராசை, காமம், புறம்பேசுதல் போன்ற தீய குணங்களில் இருந்து விலகி நிற்க வேண்டும். சகோதரத்துவத்தைப் பேண வேண்டும் என்கின்றனர். பல அலுவலகங்களில் நோன்பு இருப்பவர்கள் தொழுகை செய்ய தனி அறை அமைக்கப்பட்டுள்ளது. தொழுகை செய்ய இயலாதவர்கள் மனதில் கடவுளை வணங்களாம் என கூறப்பட்டுள்ளது.
30 நாள் நோன்பு முடிந்து ரமலான் மாத இறுதி நாள் ஈகை திருநாளாக கொண்டாடப்படுகிறது. ஈகை திருநாளன்று காலையில் குளித்துவிட்டு, காலை உணவை கட்டாயம் அருந்திவிட்டு பொது தொழுகைக்கு செல்வார்கள். தொழுகையில் உலக அமைதி மற்றும் மக்களின் நலனுக்காக பிரார்த்தனை மேற்கொள்ளப்படும். தொழுகை முடித்துவிட்டு குடும்பத்தினருடன் மத்திய உணவை அருந்தி, அக்கம் பக்கத்தினருக்கும் உணவை பங்கிட்டு கொடுப்பார்கள். ஈகை திருநாளன்று கட்டாயம் அனைத்து இஸ்லாமிய வீடுகளில் இறைச்சி பிரியாணி, கீர் உணவுகள் இருக்கும். மத்திய உணவை முடித்துக்கொண்டு மாலை வேலையில் அனைவரும் வெளியே செல்வது வழக்கம்.