(Source: ECI/ABP News/ABP Majha)
தமிழகத்தில் பொது இடங்களில் ராமர் கோயில் நிகழ்ச்சியை அனுமதின்றி ஒளிபரப்ப கூடாது- காவல்துறை
தமிழகத்தில் பொது இடங்களில் ராமர் கோயில் நிகழ்ச்சியை அனுமதியின்றி நேரலை செய்யக்கூடாது என காவல்துறை தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நாளை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் பொது இடங்களில் அனுமதியின்றி ராமர் கோயில் நிகழ்ச்சியை நேரலை செய்ய கூடாது என காவல்துறை தெரிவித்துள்ளது.
நிர்மலா சீதாராமன் கண்டனம்
முன்னதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ஜனவர் 22ம் தேதியன்று நடைபெறும் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப தமிழக அரசு தடை விதித்துள்ளது . தமிழகத்தில் ஸ்ரீராமருக்கு 200க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இந்திய சமயம் அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படும் கோயில்களில் ஸ்ரீ ராமரின் பெயரில் பூஜை/பஜனை/பிரசாதம்/அன்னதானம் அனுமதிக்கப்படுவதில்லை. தனியாருக்கு சொந்தமான கோயில்களில் நிகழ்ச்சிகளை நடத்துவதையும் போலீசார் தடுத்து வருகின்றனர். பந்தல்களை கிழித்து விடுவோம் என அமைப்பாளர்களை மிரட்டுகின்றனர்.இந்த இந்து விரோத, வெறுக்கத்தக்க செயலை வன்மையாக கண்டிக்கிறேன்”என குறிப்பிட்டுள்ளார். தமிழ் நாளேடு ஒன்றில் வெளியான செய்தியை குறிப்பிட்டு, நிர்மலா சீதாராமன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
அறநிலையத்துறை விளக்கம்
இந்நிலையில், தமிழ்நாடு கோயில்களில் ராமர் பெயரில் சிறப்பு பூஜைக்கு தடை விதிக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறானது. அப்படியான எந்த அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலத்தில் எழுச்சியோடு நடைபெற்று வரும், திமுக இளைஞரணி மாநாட்டை திசைதிருப்புவதற்காக திட்டமிட்ட வதந்தி பரப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் ராமர் பெயரில் பூஜை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்தத் தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை. முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, உயர்ந்த பதவியில் உள்ள ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது” என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
Ram Halwa: அயோத்தி பக்தர்களுக்காக 7 ஆயிரம் கிலோ அல்வா.. சிறப்புகள் என்ன தெரியுமா?
Watch Video : பளிங்கு தரைகளும், ஜொலிக்கும் தூண்களும்! கண்ணை கவரும் அயோத்தி ராமர் கோயில் வீடியோ!