தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும் - சில இடங்களில் மட்டுமே கனமழை
வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். அவ்வப்போது விட்டுவிட்டு மிதமான மழை பெய்யும். சில நேரங்களில் கனமழை இருக்கும்..ஆனால், தொடர் பெருமழை ஆபத்து நீங்கியது என தனியார் வானிலை ஆய்வாளர்கள் கருத்து
கடந்த இரண்டு தினங்களாக, தலைநகர் சென்னை முதல் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளை மிரட்டி, புரட்டி எடுத்து வரும் பருவமழையின் தாக்கம் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கலாம். தற்சமயத்திற்கு, தொடர் பெருமழை ஆபத்து தமிழகத்திற்கு நீங்கியது என்றாலும் தவறில்லை என தனியார் வானிலையாளர்கள் பலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
அவர்களின் கருத்துக்கு ஏற்ப, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் செயற்கைக்கோள் புகைப்படங்களிலும், மழை அடர் மேகங்கள் பெருமளவு தமிழகத்தின் உட்பகுதியைத் தாண்டி சென்றிருப்பதைக்காண முடிகிறது. ஆனால், மழையின் தாக்கம் முழுவதுமாக நீங்கியது எனக் கூற முடியாது. ஏனெனில், தற்போது மேகக்கூட்டங்களின் காரணமாக, வடதமிழகம், கடலோர தமிழகம், உள் மாவட்டங்களில் அவ்வப்போது மிதமான மழை முதல் சில சமயங்களில் கனமழை கூட பெய்யலாம். ஆனால், தொடர் பெருமழை ஆபத்து நீங்கியது என்பதைத்தான் செயற்கைக்கோள் மேகக்கூட்ட புகைப்படங்கள் எடுத்துச் சொல்வதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
தற்போது, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் வரைபடங்களின் அடிப்படையில், கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய இடங்களுக்கு மட்டும் ஆரஞ்சு நிற அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் சில சமயங்களில் கனமழை பெய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மற்ற இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், மழையின் அளவு, மிதமாகவே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
தலைநகர்ச் சென்னை பொறுத்தமட்டில், தொடர் பெருமழை ஆபத்து நீங்கியது என்றே சொல்லலாம். ஆனால், இன்று பெரும்பாலும் மேகமூட்டம் காணப்படும். அவ்வப்போது மிதமான மழை பெய்யலாம். சில நேரங்களில் சூரியன் பளிச்சென எட்டிப்பார்க்கும் என்று எதிர்பார்க்கலாம். இன்று விடியற்காலை பெய்தது போல், இடியுடன் கூடி தொடர் பெருமழை பெய்வதற்கான வாய்ப்புகள் மிக, மிக குறைவு என்றே தற்சமயத்திற்கு வானிலையாளர்கள் கணித்துள்ளனர்.
கடந்த இரண்டு தினங்களாகப்பெய்த மழையின் காரணமாக, அடுத்த இரண்டு தினங்களுக்கு சில இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும், நேற்றைய தினம் சீர்காழியில் 14 மணி நேரத்தில் 31 செ.மீ. மழை என்பது போல் மிகப்பெரிய அளவு மழை பெய்வதற்கு வாய்ப்புகள் இல்லை என்பதே தற்போது வானிலையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதற்கிடையே, வரும் 16-ம் தேதி அளவில், வங்கக் கடலில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த பகுதி உருவாகலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது சிறிது, சிறிதாக வலுப்பெற்று, தமிழகம் மற்றும் புதுச்சேரி கரைப்பகுதியை நோக்கி, 18 அல்லது 19-ம் தேதி வாக்கில் நகர்ந்து வரக்கூடும். அந்தச் சமயத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை, தமிழகத்திற்கு தென்மேற்கு பருவமழையும் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக மழை பொழிவை கொடுத்திருந்தது. வடகிழக்குப் பருவமழையும் தொடங்கிய சில தினங்களிலேயே, ஒரு மாதத்திற்கான மழை அளவை, பல இடங்களில் சில தினங்களிலேயே கொடுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, மயிலாடுதுறை போன்ற மாவட்டங்கள், மழை மாவட்டம் என செல்லமாக அழைக்குமளவுக்கு கூடுதலாக மழையைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மேற்குறிப்பிட்ட விடயங்கள் குறித்து விரிவாக, சென்னையில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மண்டல அலுவலத்தின் உயர் அதிகாரிகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள். தற்போது தனியார் வானிலை ஆய்வாளர்கள் மற்றும் சர்வதேச வானிலை ஆய்வு மையங்களின் கணிப்புகளின் அடிப்படையில் இச்செய்தியை வெளியிட்டுள்ளோம்.