Rain Alert: சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொட்டிய கோடை மழை - மகிழ்ச்சியில் மக்கள்
சென்னையில் இன்று அதிகாலையில் திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சிகள் ஆழ்ந்துள்ளனர்
![Rain Alert: சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொட்டிய கோடை மழை - மகிழ்ச்சியில் மக்கள் Rain surprised in Chennai people in early morning today Rain Alert: சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொட்டிய கோடை மழை - மகிழ்ச்சியில் மக்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/06/5b87eef54619e9afa83d357104886f181715018282960206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னையில் இன்று அதிகாலையில் சில இடங்களில் திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்ந்தனர். இதனால் சற்று வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் அதன் கோரமுகத்தை காட்டிக் கொண்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதலே பெரும்பாலான இடங்களில் தினசரி 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியதால் மக்கள் பெரும் அவதிப்பட்டனர். இதனிடையே தற்போது கத்திரி வெயில் காலமும் தொடங்கி விட்டதால் பகல் நேரங்களில் வீட்டை விட்டு மக்கள் வெளியே வருவதே இல்லை.
கோடை மழை வருமா அல்லது வெயிலின் தாக்கம் தணியுமா என தினசரி எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுவதால் மக்கள் சற்று நிம்மதியடைந்தனர். ஆனால் தலைநகர் சென்னையில் மழைக்கான அறிகுறியே இல்லாமல் இருந்தது. ஆனால் இரவு நேரத்தில் குளிர்ந்த காற்று வழக்கதை விட அதிகமாக வீசி வந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று அதிகாலையில் 4.30 மணி அளவில் திடீரென மழை பெய்தது. இது தூங்கிக் கொண்டிருந்த அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. சென்னையில் சைதாப்பேட்டை, கிண்டி, ஆலந்தூர்,மீனம்பாக்கம் விமான நிலையம், அடையார், வேளச்சேரி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், வடபழனி, தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், ஆயிரம் விளக்கு, நந்தனம் ஆகிய சென்னையின் உள் இடங்களில் நல்ல மழை பெய்தது. ஆனால் 10 நிமிடங்கள் மட்டுமே இந்த மழையானது நீடித்தது. இருந்தாலும் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் சற்று நிம்மதியடைந்தனர்.
இதேபோல் விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் கோடை மழை ஆங்காங்கே பெய்து வருகிறது.
களைகட்டும் குளிர்பானகடைகள்
வெயிலின் தாக்கம் 10 மணிக்கு மேல் இருந்தாலும் அதிகாலை முதலே புழுக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் மக்கள் தண்ணீர், இளநீர் மற்றும் குளிர்பானங்கள் அதிகளவில் பருகி வருகின்றனர். மேலும் ஆங்காங்கே திடீர் குளிர்பான கடைகளும் முளைக்கத் தொடங்கியுள்ளது. மக்களிடம் தேவை அதிகரிப்பதால் இளநீர், நுங்கு போன்றவற்றின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் பகல் நேரங்களில் மக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் பகல் நேரங்களில் போக்குவரத்து நெரிசலின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. அதேபோல் வெயில் தாக்கம் காரணமாக பலரும் குளிர்சாத வசதி கொண்ட தியேட்டர்கள், மால்கள் ஆகிய இடங்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)