Rahul Gandhi-Vijay: கரூர் சம்பவம்; விஜய்யை தொலைபேசியில் தொடர்புகொண்ட ராகுல் காந்தி - என்ன பேசினார்.?
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், தவெக தலைவர் விஜய்யுடன் தொலைபேசிய வாயிலாக பேசியுள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. அவர் என்ன பேசினார்.? பார்க்கலாம்.

கடந்த சனிக்கிழமையன்று, கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, விஜய்யை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர் என்ன பேசினார் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
விஜய்யிடம் என்ன பேசினார் ராகுல்.?
கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, தவெக தலைவர் விஜய்யை நேற்று தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி.
அப்போது, கரூரில் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததாகவும், கூட்ட நெரிசல் எப்படி ஏற்பட்டது என்பதைப் பற்றியும், பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்தும் ராகுல் காந்தி கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. இருவரும், சுமார் 15 நிமிடங்கள் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவமும், தற்போதை வரையிலான நிலவரமும்
கடந்த சனிக்கிழமை இரவு, கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், தவெக தலைவர் விஜய் கலந்துகொண்டு பேசினார். அந்த கூட்டத்திற்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.
அப்போது, கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டு, அதில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். இன்று காலை நிலவரப்படி, மொத்தம் 41 பேர் உயிரிழந்துள்ளனர். கரூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 82 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், இது தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் எனக் கோரி, தவெக சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட நிலையில், அங்கிருந்து உடனடியாக புறப்பட்டு, சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பினார் விஜய். அப்போதிலிருந்து அவர் வெளியே வராமல் இருந்த நிலையில், சுமார் 34 மணி நேரத்திற்குப் பிறகு இன்று காலை தனது வீட்டிலிருந்து கிளம்பி வெளியே சென்றுள்ளார் விஜய். பலத்த பாதுகாப்புடன் சென்ற அவர், எங்கு சென்றார் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
இதனிடையே, கரூர் சம்பவம் குறித்து விசாரணை நடத்திவரும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம், 2-வது நாளாக இன்று சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், கரூர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசல் சம்பவத்தை விசாரிக்க புதிய விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி பிரேமானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.





















