Pulithevar birthday: ரியல் பாகுபலி.. படித்தாலே புல்லரிக்கும் பூலித்தேவர் வரலாறு! பிறந்தநாளுக்கு தலைவர்கள் வாழ்த்து!
ஆங்கிலேயரை முதன் முதலில் எதிர்த்து நடுங்க வைத்த பூலித்தேவரின் 307 வது பிறந்தநாளை முன்னிட்டி பிரதமர், முதலமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் அவரின் தியாகத்தை போற்றி வருகின்றனர்.
ஆங்கிலேயர்களிடம் வரி செலுத்த முடியாது என்றும், நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் பாளையக்காரரான பூலித்தேவர் தான் முதன் முதலில் எதிர்ப்பு தெரிவித்தார்
பூலித்தேவர்:
பூலித்தேவர் , தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெற்கட்டான் செவ்வல் பகுதியை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்து கொண்டிருந்தார். இவர், சித்திரபுத்திர தேவருக்கும் சிவஞான நாச்சியாருக்கும் மகனாக 1715 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி பிறந்தார். இன்றும் வருடந்தோறும் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி, அவரை போற்றும் வகையில், பூலித்தேவர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இளம் வயதில் முறையான கல்வி கற்று இலக்கிய மற்றும் இலக்கணங்களில் சிறந்து விளங்கினார்.
இவர், தன் நிலத்தின் மீது ஆதிக்கம் செலுத்த நினைக்கும் எவருக்கும், ஒரு மணி நெல்லைக் கூட வரியாக செலுத்த மாட்டாராம். அதன் காராணமாகவே, அவர் ஆட்சி செய்த பகுதியை நெற்கட்டான் செவ்வல் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
பூலித்தேவர் சிறந்த கவிதை எழுதும் வளம் கொண்டவர் என்றும் கூறப்படுகிறது. அவருக்கு 12 வயது இருக்கும் போதே வாள்வீச்சு, அம்பு எய்தல், சிலம்பாட்டம், கவண் எறிதல், குதிரை ஏற்றம், யானை ஏற்றம் உள்ளிட்ட வீரக் கலைகளை திறம்பட கற்றுத் தேர்ந்தார்.
பூலித்தேவரை உடல் அமைப்பை விவரிக்கும் வகையில் நாட்டுப்புற பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
”ஆறடி உயரம் உடையவர்.
ஒளி பொருந்திய முகம்,
திண் தோள்,
பவளம் போன்ற உதடு,
அகன்ற மார்பும்” இருந்ததாக அப்பாடல் கூறுகிறது.
பூலித்தேவனின் திறமையை கண்ட பெற்றோர், 1726-ஆம் ஆண்டு பட்டம் சூட்டி அரசனாக்கினர். பின்னர், அவருடைய அக்கா மகள் கயல்கண்ணியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1 மகள் மற்றும் 2 மகன்கள் இருந்தனர். கயல் கண்ணியின் சகோதரரான சவுணத்தேவரும், பூலித்தேவனும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.
ஆங்கிலேயரை விரட்டியடித்த பூலித்தேவர்:
வரி செலுத்துவது தொடர்பாக, 1750 ஆண்டில் தன்னை வந்து சந்திக்குமாறு பூலித்தேவருக்கு ஆங்கிலேயரான ராபர்ட் கிளைவ் அறிவிப்பு விடுகிறார். இதை கண்டு கோபமடைந்த பூலித்தேவன், திருச்சிக்கு தனது படையுடன் சென்று ஆங்கிலேயரை தாக்கி வெற்றி பெற்றார் என பூலித்தேவன் சிந்து பாடல் கூறுகிறது.
1756 ஆம் ஆண்டு மார்ச் மாத மாதத்தில், திருநெல்வேலி பகுதியில் மாபஸ்கானுக்கும் பூலித்தேவனுக்கும் இடையே போர் நடைபெற்று கொண்டிருக்கிறது. அப்போரில் உயிர் நண்பனான மூடோமியாவை, ஆங்கிலேயர்கள் கொன்றனர். இதனால் பெரும் சோகமடைந்த பூலித்தேவன் போரை நிறுத்தினார். இதையடுத்து மாபூஸ்கான் திருநெல்வேலியை கைப்பற்றினான்.
ஆங்கிலேயரின் சதி திட்டம்:
மேலும் 1765 ஆம் ஆண்டுகளில் 10-க்கு மேற்பட்ட போர்களில், ஆங்கிலேயர்களை பூலித்தேவர் தோற்கடித்ததாக கூறப்படுகிறது. பூலித்தேவரை தோற்கடிக்காமல் திணறிய ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி படைகள், நரி தந்திரத்துடன் திட்டம் தீட்டுகின்றனர்.
பூலித்தேவரின் கூட்டாளிகளாக இருந்த இதர பாளையக்காரர்களுக்கு பதவி, மது மற்றும் பணத்தாசை காட்டி கூட்டணியிலிருந்து பிரிக்கின்றனர். பின்னர் 1766 ஆண்டு ஆங்கிலேய தலைமை தளபதி பொறுப்பு வகித்த கான்சாகிப்,ஒற்றர்கள் மூலமாக ரகசிய தகவல்களை தெரிந்து கொண்டு பூலித்தேவரை தோற்கடித்தார். பின்னர் பூலித்தேவர் தலைமறைவாகி மீண்டும் ஆட்சியை மீண்டும் பூலித்தேவர் கைப்பற்றினார்.
உடலை வைத்து கோட்டை அடைப்பு:
1767 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் பூலித்தேவரின் வலிமையறிந்து, பெரும் படையுடனும், பீரங்கிகள் மற்றும் துப்பாக்கியுடனும் பூலித்தேவரின் பாளையத்தை தாக்க ஆரம்பித்தனர். பெரும்படையை சற்றும் எதிர்பார்க்காத பூலித்தேவர்,அவர்களை எதிர்த்து போர் புரிகிறார்.
பீரங்கிகள் கோட்டையின் சுவர்களை துளையிட ஆரம்பித்தன. கோட்டையின் துளையை களிமண்ணால் அடைத்தனர். பின்னர் உடல்களை கொண்டு அடைத்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் பீரங்கிகள் முன் வேல் கம்பு ஈட்டியை வைத்து சமாளிக்க முடியாமல் பூலித்தேவரின் படை தோல்வியடைந்தது. தப்பிச் சென்ற பூலித்தேவர், என்ன ஆனார் என்ற தகவல் தெளிவாக கிடைக்கவில்லை. சிலர். பிற பாளையக்காரர் பிடித்து கொடுத்ததால், அவரை ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டனர் என்றும் கூறப்படுகிறது.
இன்று பூலித்தேவரின் 307 வது பிறந்தநாளையொட்டி, பிரதமர், முதலமைச்சர் உள்ளிட்ட பல தலைவர்களும் அவரின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் கருத்து தெரிவித்துள்ளனர்.
மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த நாளில் வணக்கங்களை செலுத்துகிறேன். அவரது வீரமும் உறுதிப்பாடும் எண்ணற்றோருக்கு ஊக்கமளித்து வருகிறது. முன்னணியில் நின்று அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டவர். மக்களுக்காக எப்போதும் தளராது பாடுபட்டவர்.
— Narendra Modi (@narendramodi) September 1, 2022
"சல்லிக்காசு தரமுடியாது" என ஆங்கிலேயரை விரட்டியடித்து இந்திய விடுதலை வரலாற்றின் முதல் ஏட்டை எழுதிய மாவீரர் பூலித்தேவரின் பிறந்தநாளில் அவருக்கு என் வீரவணக்கம்!
— M.K.Stalin (@mkstalin) September 1, 2022
நெற்கட்டும்செவலில் நினைவுமாளிகை அமைத்து அவர் தியாகத்தைப் போற்றியது கழக அரசு!
இந்தியா முழுமையும் அவரைப் போற்றச் செய்வோம்! pic.twitter.com/4Cc4bhmyma
பாரத தேசத்தின் விடுதலைக்கு வித்திட்டு,தமிழ் மண்ணிற்கு பெருமை சேர்த்த மாவீரர் பூலித்தேவரின் 307-வது ஜெயந்தி நாளில் அவரின் விடுதலை உணர்வையும், தியாகத்தையும் போற்றும் வகையில்,நெற்கட்டும்சேவலில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்@JPNadda @blsanthosh #pulithevar pic.twitter.com/QjGhapOn6E
— Dr.L.Murugan (@Murugan_MoS) September 1, 2022
ஆங்கிலேய அரசை எதிர்த்து,
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) September 1, 2022
நெஞ்சுரம்கொண்டு போரிட்டு “வெள்ளையனே வெளியேறு” என்று முதன்முதலில் வீரமுழக்கமிட்டு பல வெற்றிகளை கண்ட, சரித்திரம் போற்றும் #மாமன்னர்_பூலித்தேவன் அவர்களின் 307வது பிறந்தநாளில் அவரின் வீரத்தை போற்றி அவர்தம் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன். pic.twitter.com/gHhrEhfmTi
தென்பாண்டிச் சீமையில் இருந்து ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முதன்முதலாக விடுதலைக் கனலை மூட்டிய மாமன்னர் பூலித்தேவரின் ஜெயந்தி விழா இன்று!
— TTV Dhinakaran (@TTVDhinakaran) September 1, 2022
' உயிரை விட தேசம் பெரிது' என்ற உயர் குணத்தோடு, நம் நாட்டுக்காக தியாகம் புரிந்த அந்த மாவீரரை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்!