Puducherry Weather: புதுச்சேரியில் விடிய விடிய இடி, மின்னலுடன் பலத்த மழை... வீட்டுக்குள் முடங்கிய மக்கள்...!
Puducherry Weather: புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரை) 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது

புதுச்சேரி : காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்துள்ளது.
புதுச்சேரியில் வெளுத்து வாங்கும் கனமழை
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அதிகாலை வரை இடி, மின்னலுடன் பலத்த மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. பின்னர் அவ்வப்போது விட்டு விட்டு பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரை) 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் நகரின் பல பகுதிகளில் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
சாலையில் தேங்கிய மழைநீர்
குறிப்பாக, கிருமாம்பாக்கம் அடுத்த காட்டுக்குப்பம் குடியிருப்பு பகுதிகளில் இருந்து புதுச்சேரி -கடலூர் சாலையில் தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், சுமார் 1 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது.
காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறக்கூடும்!
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இன்று (திங்கட்கிழமை) புதுவை மற்றும் காரைக்காலில் தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வருகிற 29-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
கனமழை மற்றும் காற்று வீசக்கூடும் என்ற எச்சரிக்கையைத் தொடர்ந்து, மாணவர்களின் பாதுகாப்பு கருதி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் கல்வித்துறை சார்பில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் விடுத்துள்ள அறிவிப்பில், இன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக அடுத்தடுத்து புயல் சின்னங்கள் உருவாகி வருகிறது.தற்போது தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழையானது வெளுத்து வாங்கி வருகிறது. இன்னும் அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கு ஏற்றார் போல் வங்க கடலில் புதிய புயல் உருவாகவுள்ளது. இதற்கு சின்யார் என பெயரிடப்படவுள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய் வெளியிட்டுள்ள அறிக்கையில், மலாக்கா ஜலசந்தி, அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய குறைந்த காற்றழுத்த பகுதி, இன்று 24 நவம்பர் 2025,அதே பகுதியில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்குப் வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் வாய்ப்புள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்தும் நகர்ந்து, அடுத்த 48 மணி நேரங்களில் தென்கிழக்குப் வங்கக் கடல் பகுதியில் ஒரு புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் நேற்று குமரி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் நிலவிய மேல்-காற்று சுழற்சி, இன்று 24 நவம்பர் 2025, காலை அதே பகுதியில் தொடர்ந்தும் நீடிக்கிறது. நாளை (நவம்பர் 25ஆம் தேதி) குமரி மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்தடுத்து உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.






















