புதுச்சேரி பல்கலைக்கழகம் & நோக்கியா: மாணவர்கள் வாழ்வில் புதிய திருப்பம்! பயிற்சி & வேலைவாய்ப்பு உறுதி !
நோக்கியா இந்தியாவுடன் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

புதுச்சேரி: நோக்கியா இந்தியாவுடன் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. மேலும் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் தொழில்நுட்ப மாநாடுகளில் நோக்கியா நிபுணர்கள் பங்கேற்க திட்டமிடப்பட்டு உள்ளது.
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் தொலைதொடர்பு மற்றும் நெட்வொர்க் தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் உள்ள நோக்கியா இந்தியா இடையே தொழில்துறை மற்றும் கல்வி ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) நேற்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், நோக்கியா இந்தியா தனது தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பாடத்திட்ட மேம்பாட்டில் பங்களிக்கிறது. பல்கலைக்கழக பாடத்திட்ட குழுவில் நோக்கியா நிபுணர்கள் பங்கேற்று, தற்போதைய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப பாடத்திட்டங்களை மேம்படுத்த உதவுவார்கள்.
பல்கலைக்கழகத்தில் நடைபெறும் தொழில்நுட்ப மாநாடுகளில் நோக்கியா நிபுணர்கள் பங்கேற்க திட்டம்
மேலும், பல்கலைக்கழகத்தில் நடைபெறும் தொழில்நுட்ப மாநாடுகளில் நோக்கியா நிபுணர்கள் பங்கேற்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்நிலையில், இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் நோக்கியாவில் பயிற்சி பெறும் வாய்ப்பு ஏற்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக நடைபெற்ற பயிற்சி பட்டறை நிறைவு விழாவில், பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் மோகன் பேசுகையில், “நோக்கியாவுடன் கூடிய இந்த ஒப்பந்தம், வகுப்பறை மற்றும் தொழில்துறை இடையிலான இடைவெளியை குறைக்கும் முக்கியமான முயற்சி. இது எங்கள் பாடத்திட்டத்தை பலப்படுத்தும்,” என்றார்.
மேலும், நோக்கியா தற்போது முனைவர் பட்டப்படிப்பு மாணவர்கள் இருவருக்கு பயிற்சி வாய்ப்பு அளித்துள்ளதாகவும், பி.டெக் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு, தொடர்பியல் பொறியியல் மாணவர்களுக்கும் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் வழங்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்விழாவில், கணினி பொறியியல் துறைத் தலைவர் செல்வராஜூ, திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு இயக்குநர் விவேகானந்தன், கல்வி மற்றும் கல்வித் புதுமை இயக்குநர் ஸ்ரீநாத், கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப டீன் நித்யானந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நோக்கியா இந்தியா சார்பில் சிவசைலம், ரங்ககிருஷ்ணன், சந்தோஷ், கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




















