புதுச்சேரி டூ காரைக்கால்: நாளை ஒரு சொட்டு மது கூட கிடைக்காது! திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அதிரடி தடை!
பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாளான திருவள்ளுவர் தினத்தையொட்டி, நாளை 16-ந்தேதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி : பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாளான நாளை (ஜனவரி 16) 'திருவள்ளுவர் தினம்' கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட வேண்டும் என கலால் துறை உத்தரவிட்டுள்ளது.
நாளை மதுக்கடைகளுக்கு விடுமுறை
புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக சிறப்பான முறையில் கொண்டாடி வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளுக்கும் ஜனவரி 15-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை (வியாழன் முதல் ஞாயிறு வரை) 4 நாட்கள் தொடர் விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டு இருந்தது. மேலும், நேற்று போகியை முன்னிட்டு புதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், 31-ந் தேதி அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாளான திருவள்ளுவர் தினத்தையொட்டி, நாளை 16-ந்தேதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் தினம்
திருவள்ளுவர் தினம் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தின் இரண்டாம் நாளான மாட்டுப் பொங்கலன்று கொண்டாடப்படுகிறது, இது கிரிகோரியன் நாட்காட்டியில் பொதுவாக ஜனவரி 15 அல்லது 16 ஆம் தேதியாக இருக்கும், மேலும் இது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அரசு விடுமுறையாகும்.
நாடு கடந்து வாழும் தமிழர்களால் ஆண்டுதோறும் தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டுவருகிறது. பொங்கல் கொண்டாட்டம் என்பது எப்போதும் ஒரு நாளில் முடிவு அடைவதில்லை. தை 1ம் தேதி பொங்கல் விழாவும், தை 2-ம் தேதி மாட்டுப் பொங்கலாகவும், திருவள்ளுவர் தினமாகவும் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. அனைத்து நெறிகளையும் கற்பித்துச் சென்றவர் திருவள்ளுவர். பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் பலரும் தங்களுடைய உரைகளின்போது இன்றளவும் திருக்குறளை மேற்கொள் காட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர். திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
மறைமலை அடிகள் தலைமையில் 500க்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் 1921ஆம் ஆண்டு சென்னை-பச்சையப்பன் கல்லூரியில் கூடி தமிழர்களுக்கென ஒரு தனி ஆண்டு' தேவை என்று கருதி, திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றைப் பின்பற்றுவது என்றும், அதையே "தமிழ் ஆண்டு' எனக் கொள்வதென்றும், திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு. 31 என்றும் முடிவெடுத்தார். அதனைக் கணக்கிட்டு திருவள்ளுவர் ஆண்டு அனுசரிக்கப்படுகிறது. எனினும் திருவள்ளுவர் பிறந்த வருடத்திற்கான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை.
ட்ரெண்டிங் செய்திகள்





















