“நான் மக்களை சந்திப்பதை யாரும் தடுக்க முடியாது” - ஆளுநர் தமிழிசை
அண்ணன் நாராயணசாமி அன்று இருந்த ஆளுனரிடமும் பிரச்சனை செய்வேன். இன்று உள்ள ஆளுனரிடமும் பிரச்சனை செய்வேன் என செயல்பட்டு வருகிறார்.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உதவியோடு புதுவை பல்கலைக்கழக புவிசார் அறிவியல் துறை மற்றும் மகாராஷ்டிரா, கோலாப்பூர் சிவாஜி பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் ஒருங்கிணைந்த பயிற்சித் திட்டத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பின் பயன்பாடு குறித்த கருத்தரங்கினை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார். புதுவை பல்கலைக்கழகத் துணைவேந்தர் குர்மீத் சிங், சிவாஜி பல்கலைக்கழகப் பேராசிரியர் சொங்காவதே ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்
ஆளுநர் தமிழிசை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது :-
மக்களுக்காகதான் அனைத்து அலுவலகமும். மக்களை பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என கூறுவது தவறானது. நான் மக்களை பார்க்க கூடாது என கூறும் அதிகாரத்தை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமிக்கு யார் கொடுத்தது? மக்களின் பிரச்சனைகளை தெரிந்துகொண்டு அதை அதிகாரிகளுக்கு சொல்வதற்கு தான் இந்த சந்திப்பு கூட்டமே. ஆளுநர் அன்போடு மக்களை சந்தித்து குறைகேட்பதில் என்ன தவறு? இந்த பிரச்சனையை நான் மக்களிடமே விட்டுவிடுகிறேன். மக்களே இதற்கு பதில் கூறட்டும். அதிகாரிகள் தினமும் மக்களை எளிதில் சந்திக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். இதற்கு முதலமைச்சர் எப்போதும் தடை போட மாட்டார்.
அண்ணன் நாராயணசாமி அன்று இருந்த ஆளுனரிடமும் பிரச்சனை செய்வேன். இன்று உள்ள ஆளுனரிடமும் பிரச்சனை செய்வேன் என செயல்பட்டு வருகிறார். நான் மக்களை சந்திப்பதை யாரும் தடுக்க முடியாது. கொரோனாவில் இருந்து தடுப்பூசி மூலம் மக்களை காப்பாற்றி, அவர்களுக்கு உணவு கொடுத்து காப்பாற்றியுள்ளோம். இதனை உலக நாடுகளே வியந்து பாராட்டுகின்றன.இன்று 3- வது பொருளாதாரமாக முன்னெடுத்து செல்கிறோம். உலகத்தில் பல நாடுகள் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாமல் தடுமாறி வரும் நிலையில், இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறி வருகிறது. நாட்டில் 7500 ஸ்டார்ட் அப் கொண்டு வரப்படுகிறது. இணையதளத்தில் என் படங்களை வைத்து விமர்சனம் செய்வதும், தவறாக பயன்படுத்துவதும் நடந்துவருகிறது. நான் உண்மையாக இருக்கிறேன் அதனை பற்றி நான் கவலைப்படவில்லை. மக்களுக்கான எனது பணி தொடரும். தெலுங்கானா மக்கள் என்னை பாராட்டி வருகின்றனர். அரசுக்கும் எனக்கும் சில பிரச்சனைகள் உள்ளன. அங்குள்ள முதல்வர் மத்திய அரசை எதிர்க்கிறார். அதனால் நான் அங்கு சில பணிகளை மேற்கொள்ளும்போது என்னை எதிர்க்கிறார். அண்ணன் நாராயண சாமிக்கு என்ன பிரச்சனை. மக்கள் நலனை விட அவர்களது நலன் தான் முக்கியமாக உள்ளது. கவர்னர் என்றாலே நாராயணசாமிக்கு அலர்ஜியாக உள்ளது நேர்மையான ஆட்சி புதுவையில் நடந்து வருகிறது. தவறு செய்யும் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.