Maternity Benefit Scheme: கர்ப்பிணிகளுக்கு தமிழக அரசு கொடுக்கும் நிதியுதவி தொகை - விண்ணப்பிப்பது எப்படி ?
Dr Muthulakshmi Reddy Maternity Benefit Scheme: கர்ப்பகாலத்தின் நான்காவது மாதத்தில் ரூ.6 ஆயிரமும், குழந்தை பிறந்த நான்காவது மாதத்தில் ரூ.6 ஆயிரமும், குழந்தை பிறந்த 9-வது மாதத்தில் ரூ.2 ஆயிரமும் வழங்கப்படும்.
கர்ப்பிணிகளுக்கு தவணை முறையில் நிதியுதவி தொகை
தமிழகத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு ஐந்து தவணைகளாக வழங்கப்பட்டு வரும் நிதியுதவி தொகை தற்போது, மூன்று தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்தொகை திட்டங்களில் தற்போது சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இத்திட்டம் குறித்து கூடுதல் விவரங்களை நம்மிடம் பகிர்ந்துள்ளார் அரசு மருத்துவர் டாக்டர் ப்ரியா பத்மாசினி.
தமிழக அரசு சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கர்ப்பிணிகள் கருத்தரித்த 12 வாரத்துக்குள் ஆரம்ப சுகாதார செவிலியர்களிடம் ஆதார் அட்டை, வங்கி கணக்கு எண் விவரங்களை தெரிவித்து, பெயரை பதிவு செய்து, பிக்மி எண் பெற்றவுடன் இதற்கு முன்பு வரை ஐந்து தவணைகளாக வழங்கப்பட்டு வந்த ரூ.14,000 நிதியுதவி இனி மூன்று தவணைகளில் வழங்கப்படுகிறது.
கர்ப்பகாலத்தின் நான்காவது மாதத்தில் ரூ.6 ஆயிரமும், குழந்தை பிறந்த நான்காவது மாதத்தில் ரூ.6 ஆயிரமும், குழந்தை பிறந்த 9-வது மாதத்தில் ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட இருக்கிறது. அதே போல், பேறு காலத்தில் மூன்றாவது மற்றும் ஆறாவது, மாதங்களில் இரு முறை ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுகிறது.
மேலும் இந்த ஊட்டச்சத்து பெட்டகங்களில் உடல் திறனை மேம்படுத்தும் வகையில் சத்து மாவு, இரும்புச்சத்து டானிக், உலர் பேரீட்சை, பிளாஸ்டிக் கப், பக்கெட், ஆவின் நெய், அல்பெண்டாசோல் மாத்திரை, கதர் துண்டு அடங்கிய பொருட்கள் இடம் பெற்றுள்ளன.
இத்திட்டத்தின் மூலம் பயனடைபவர்களுக்கான தகுதி :
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, பயனாளி வறுமைக் கோட்டிற்குகீழ், அதற்கான தகுதியுடையவராக இருக்க வேண்டும். அரசு மருத்துவ நிலையங்களில் மட்டுமே பிரசவம் நடைபெற்றிருக்க வேண்டும்.
பயனாளி 19 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். இந்த நிதிஉதவி இரண்டு பிரசவங்களுக்கு மட்டும் வழங்கப்படும். இதுபோன்ற பல நிபந்தனைகள் இத்திட்டத்தின் கீழ் கடைபிடிக்கப்படுகிறது.
மேலும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் கர்ப்பிணி தாய்மார்கள் தங்களுடைய ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், பிக்மி எண், வங்கி கணக்கு புத்தகத்துடன் மொபைல் எண்ணை இணைத்தல், ஆதார் கார்டு எண் இணைத்தல் போன்றவற்றை செய்திருக்க வேண்டும்.
ஏனென்றால் கர்ப்பிணி தாய்மார்கள் அளிக்கும் விவரங்கள் சரியாக இல்லை என்றால் அவர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவிகளில் குளறுபடிகள் ஏற்படும் எனவும் டாக்டர் பிரியா தெரிவித்தார்.
அதுமட்டுமில்லாமல் விண்ணப்பித்த கர்ப்பிணி தாய்மார்களுக்கு நிதி உதவி வரவில்லை என்றால் அந்தந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகி தங்களுக்கு தேவையான விவரங்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தார்.