குளித்தலையில் அரசு தலைமை மருத்துவமனையை காணவில்லை....பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்
கரூரில் உள்ள அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக செயல்படும் என அறிவித்ததால் குளித்தலை பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
கரூர் மாவட்டம் குளித்தலையில் அரசு தலைமை மருத்துவமனையை காணவில்லை என ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டம் குளித்தலையில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு குளித்தலை தோகைமலை நங்கவரம் லாலாபேட்டை அய்யர்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரூர் காந்திகிராமத்தில் மருத்துவக் கல்லூரி உள்ளதால் இந்த அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக உயர்த்துவதாக கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்கு பின் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் குளித்தலை அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக உயர்த்துவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவித்திருந்தார். ஆனால் இந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு இணையாக விரிவாக்கம் செய்யப்படும் என்றும் கூறினார்.
மேலும் கரூரில் உள்ள பழைய அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக செயல்படும் என அறிவித்ததால் குளித்தலை பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு போராட்டங்கள், கோரிக்கையை மனுக்கள் அளித்த போதிலும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படாது எனவே பதில் கிடைத்துள்ளது. இதனால், குளித்தலை பகுதியைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினர் அரசியலுக்கு கட்சியினர், பொதுமக்கள் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை காணவில்லை. ஆனால், குளித்தலை பகுதி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.
அதில் தமிழக அரசே கண்டுபிடித்து கொடு. குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை காணவில்லை. திருடி சென்றவர்களை கண்டுபிடித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து எங்கள் குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை பொது மக்களுக்கு ஒப்படைத்திடு எனக் குறிப்பிட்டு குளித்தலை பகுதி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குளித்தலை அரசு மருத்துவமனை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக அறிவிக்கப்படாது எனக் கூறிவிட்டு, ஆனால் பதிவேடுகள் மற்றும் விருது பெரும் சான்றிதழில் குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை என இருப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பி உள்ளனர்.