Pongal wishes 2025 : ”வாழ்வில் இன்பம் பொங்கட்டும்!” அரசியல் கட்சி தலைவர்களின் பொங்கல் வாழ்த்துகள்..
Pongal 2025 : புதுப்பானையில் #தைப்பொங்கல் பொங்குவதுபோல் வாழ்வில் இன்பம் பொங்கட்டும்! என முதல்வர் ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தை திருநாள் மற்றும் உழவர்களின் திருநாளான பொங்கல் விழாவை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இன்று(14.01.25) கொண்டாடி வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் பொங்கல் வாழ்த்தை இந்த தொகுப்பில் காண்போம்.
பிரதமர் மோடி:
இந்தியா முழுவதும் உள்ள மக்கள் சங்கராந்தியையும், பொங்கல் பண்டிகையையும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர். நமது கலாச்சாரத்தின் வேளாண் பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள ஏராளமானதும், புதுப்பிக்கத்தக்கதுமான நன்றியின் கொண்டாட்டமாக இது விளங்குகிறது.
சங்கராந்திக்கும், பொங்கல் பண்டிகைக்கும் எனது நல்வாழ்த்துகள். வரவிருக்கும் அறுவடை பருவத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியும், நல்ல ஆரோக்கியமும், வளமும் கிடைக்க வாழ்த்துகிறேன் என்று பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ரவி:
இந்த பொங்கல் திருநாளில், அனைவருக்கும், குறிப்பாக உலகெங்கிலும் உள்ள தமிழ் சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நாம் அறுவடையை கொண்டாடி, பூமித்தாயின் அளவற்ற ஆசீர்வாதங்களுக்காக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். பழங்கால மரபுகளில் வேரூன்றி, உற்சாகத்துடன் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, நமது வளமான ஆன்மிக மற்றும் கலாசார பாரம்பரியத்தை பிரதிபலிப்பதுடன், பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் பழக்கவழக்கங்களைப் பேணும் பக்தியில் நம்மை ஒன்றிணைக்கிறது. பொங்கல் உணர்வு அமைதி, நல்லிணக்கம் மற்றும் வளத்தை ஊக்குவிக்கட்டும், மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றியால் நம் வாழ்க்கையை வளப்படுத்தட்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின்:
உழவே தலை என உழுதுண்டு உலகத்தார்க்கு உண்டி கொடுக்கும் உழவர் பெருமக்களுக்கும் - உலகெங்கும் வாழும் தமிழ் உடன்பிறப்புகளுக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்!
உதயசூரியனின் ஒளியெனத் தமிழரின் உள்ளங்களில் மகிழ்ச்சி நிறையட்டும்! புதுப்பானையில் #தைப்பொங்கல் பொங்குவதுபோல் வாழ்வில் இன்பம் பொங்கட்டும்! என தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன்:
வரப்பை உயர்த்தினால் நீர் உயர்ந்து, நெல் செழித்து, வாழ்வு வளம் பெறும், நாடு நலம் பெறும் என்பதை உணர்ந்தவர்கள் தமிழர்கள். அறுவடைத் திருநாளில் நம் உழைப்பை உயர்த்துவோம், சிந்தனையின் தரத்தை உயர்த்துவோம்.
பொங்கல் திருநாளில் அன்பு பொங்கட்டும்.
எடப்பாடி பழனிச்சாமி:
உலகத் தமிழர்கள் அனைவரும் அன்பு பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் அறுவடைத் திருநாளாம் பொங்கல் திருநாளில், மக்கள் அனைவரும் குன்றா நலமும், குறையா வளமும், மங்கா புகழும், மாசிலா செல்வமும் பெற்று நிறை வாழ்வு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
தவெக தலைவர் விஜய்:
பொங்கல் திருநாள்!
உலகமே போற்றி வணங்கும் உழவர் திருக்கூட்டத்தின் ஒப்பற்ற கொண்டாட்டத் திருநாள். கால்நடைகள் நன்மதிப்புப் பெறும் நன்றித் திருநாள். காளைகள் திமில் நிமிர்த்திக் களம் காணும் வீரத் திருநாள்.
2026இல் உண்மையான சமூக நீதி, உண்மையான சம நீதி, உண்மையான சமத்துவம், உண்மையான அமைதி, உண்மையான பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றுடன் பொதுமக்கள் பாதுகாப்பு நிரந்தரமாக, மகிழ்ச்சி நிலைபெற, நம் அனைவருக்குமான நல்லாட்சி லட்சியம் நிறைவேற, அதற்கான முன்னோட்டமாய் 2025ஆம் ஆண்டின் தைத்திருநாளில் பொங்கட்டும் வெற்றிப் பொங்கல். பொங்கலோ பொங்கல்!
இந்தத் தமிழர் திருநாளில் தமிழகம் தலைநிமிர உறுதி ஏற்போம்.
அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
இதையும் படிங்க: Mattu Pongal Kolam : வீடுகளை அலங்கரிக்க பொங்கல் கோலங்கள்.. ரங்கோலி டிசைன்கள் இதோ..
கவிஞர் வைரமுத்து:
தமிழன் என்ற இனத்திற்கு உரித்தான விழா பொங்கல் திருவிழா
இந்த மண்ணில் விளைந்த கரும்பு மஞ்சள் இஞ்சி, தமிழ் நிலத்தில் உழுது விளைவித்த நெல், வீட்டுச் சர்க்கரையாகிய நாட்டுச் சர்க்கரை இவையாவும் பொங்கலின் கச்சாப் பொருள்கள்
பொங்கலின் பொருள்களும் இறக்குமதி செய்யப்பட்டவையல்ல பொங்கல் என்ற திருவிழாவும் இறக்குமதி செய்யப்பட்டதன்று
எனவே பச்சைத் தமிழ் நாட்டின் பச்சைத் தமிழ் விழா பொங்கல்தான்
மண் உணவு மனிதன் மாடு என்ற நான்கு தத்துவங்களுக்கான கூட்டுறவின் குறியீடுதான் பொங்கல்
கூடிக் கொண்டாடுங்கள்; வாழுங்கள்; வாழ்த்துங்கள்