மெரினாவில் ரகளை.. போலீசை தகாத வார்த்தை சொல்லி திட்டிய ஜோடி.. தட்டி தூக்கிய காவல்துறை!
பட்டினப்பாக்கம் லூப் சாலையில் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டிய ஜோடியை மயிலாப்பூர் காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டிய ஜோடி கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
நேற்று நள்ளிரவு, சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. காரில் இருந்த ஜோடியிடம், காரை அங்கிருந்து எடுக்குமாறு ரோந்து போலீசார் கூறியுள்ளனர்.
மதுபோதையில் ரகளை செய்த ஜோடி:
அப்போது மதுபோதையில் இருந்த அந்த ஜோடி, காவல்துறையினரை இழிவாக பேசி ‘உதயநிதியை கூப்பிடுவா’ எனக்கேட்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ரோந்து காவலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளை அந்த ஜோடி இழிவாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
தட்டி தூக்கிய சென்னை போலீஸ்:
பின்னர், அந்த ஜோடி குறித்து மெரினா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், அவர்கள் சந்திரமோகன், தனலட்சுமி என தெரிய வந்தது. மேலும், அவர்கள் வேளச்சேரியில் உள்ள விடுதியில் தங்கி இருந்ததும் காவல்துறைக்கு தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்த மயிலாப்பூர் காவல்துறை, விசாரணை மேற்கொண்டு வருகிறது.
மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காமராஜர் சாலையில் இருந்து அடையாறு நோக்கி செல்லும் வாகனங்கள் லூப்சாலை வழியே மட்டும்தான் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இதனால் இரு புறங்களில் வாகன போக்குவரத்து ஏற்படாத வண்ணம் இரவு நேரங்களிலும் காவலர்கள் பணியமர்த்தபட்டு வாகனங்களை அங்கு நிறுத்தாமல் இருப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இரவு 12 மணிக்கு மேல் அதிகளவில் கடற்கரை பகுதிக்கு பொதுமக்கள் வருவதால் காவலர்கள் அங்கு வாகனங்களை நிறுத்தக்கூடாது என்ற அறிவுறுத்தலை வழங்கி வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகளிடம் மதுபோதையில் இருந்த ஜோடி இழிவாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிக்க: ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!