Anbumani Ramadoss: ’உழைக்கும் மகளிருக்கு சம ஊதியம்’ என்பதை தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டும் - பா.ம.க. தலைவர் வலியுறுத்தல்!
Anbumani Ramadoss: பெண்களுக்கு சம ஊதியம் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பெண்கள் எதிர்கொள்ளும் உழைப்பு சுரண்டலைத் தடுக்கவும், பெண்களுக்கு சம ஊதியம் வழங்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
வேலை இடங்களில் ஆண்கள்- பெண்களுக்கு இடையே நிலவும் ஊதிய விகித வேறுபாடுகள் குறித்து அன்புமணி ராமதாஸ் தனது டிவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆய்வு முடிவுகள்:
தமிழ்நாட்டில் கிராமப்பகுதிகளில் ஆண் கூலித்தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் (ரூ.556) 53% மட்டுமே பெண் கூலித்தொழிலாளர்களுக்கு (ரூ.297) வழங்கப்படுவதாகவும், நகர்ப்பகுதிகளில் 65% மட்டுமே (ரூ.576/375) வழங்கப்படுவதாகவும் ஆய்வில் தெரியவந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
மத்திய அரசின் தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இந்தியாவிலேயே கேரளத்திலும், தமிழ்நாட்டிலும்தான் அதிக கூலி வழங்கப்படுகிறது. அதேநேரத்தில் இந்த மாநிலங்களில் தான் பெண்களின் உழைப்பு அதிகமாக சுரண்டப்படுகிறது. இது மன்னிக்கக்கூடாத அநீதி.
ஆண்களும், பெண்களும் ஒரே வேலையை, ஒரே கால அளவுக்கு செய்கின்றனர். ஆனால், ஆண்களின் கூலியில் கிட்டத்தட்ட பாதியை மட்டும் மகளிருக்கு வழங்குவது எந்த வகையில் நியாயம்? அதிலும் குறிப்பாக வளர்ந்த மாநிலங்கள் என்று போற்றப்படும் தமிழகத்திலும், கேரளத்திலும் இத்தகைய அநீதி தொடரலாமா என்று பா.ம.க. தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சம ஊதியம் அவசியமானதே!
சொத்துரிமை உள்ளிட்ட பல உரிமைகளை மகளிருக்கு முதன்முதலில் வழங்கிய மாநிலம் தமிழ்நாடுதான். அத்தகைய பெருமை கொண்ட மாநிலத்தில் பெண்கள் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவதும், அதை அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதும் பெருமைக்குரியவை அல்ல என்று குறிப்பிட்டுள்ள அவர் இதற்கு அரசு தீர்வு காண வேண்டும் எனவும் கேட்டுகொண்டுள்ளார்.
ஆண்களுக்கு வழங்கப்படும் கூலியில் பெரும்பகுதி மதுக்கடைகள் மூலம் அரசுக்கு செல்லும். மகளிருக்கு வழங்கப்படும் கூலிதான் குடும்பங்களைக் காக்கும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் வாசிக்க.
இதையும் படிக்கலாமே..TN Weather: தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்