Guindy Hospital: சென்னையில் ‘தேசிய முதியோர் நல மருத்துவமனை’ - ஒரு வழியாக இன்று திறக்கிறார் பிரதமர் மோடி!
Chennai National Geriatric Hospital: சென்னை கிண்டியில் அமைந்துள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனையை , பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார்.
Chennai National Geriatric Hospital: சென்னை கிண்டியில் அமைந்துள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனை, கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் இன்று திறக்கப்படுகிறது.
தேசிய முதியோர் நல மருத்துவமனை:
சென்னை கிண்டியில் மத்திய அரசின் நிதியில் கட்டப்பட்டுள்ள, தேசிய முதியோர் நல மருத்துவமனையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். குஜராத் சென்றுள்ள அவர், அங்கிருந்தவாறு காணொலி வாயிலாக இன்று மாலை திறந்து வைக்கிறார். முற்றிலும் முதியோர் சிகிச்சைக்கு என பிரத்யேகமாக திறக்கப்படும் நாட்டின் முதல் மருத்துவமனை இது என கூறப்படுகிறது. இதன் விளைவாக, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் செயல்படும் முதியோர் நல மருத்துவத்துறை, கிண்டி தேசிய முதியோர் நல மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளது.
2014ல் வெளியான திட்டம்:
தேசிய முதியோர் நல மருத்துவமனை தொடர்பான அறிவிப்பு கடந்த 2014ம் ஆண்டு வெளியானது. அதைதொடர்ந்து சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் மருத்துவமனைக்காக தமிழக அரசு 9 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி தந்தது. இதையடுத்து 136 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கட்டுமானப் பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டன. அடுத்த சில ஆண்டுகளில் பணிகள் நிறைவடைந்தன. ஆனாலும், பயன்பாட்டிற்கு வராமல் இருந்த நிலையில், 2020-ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டதால், தேசிய முதியோர் நல மருத்துவமனை, அரசு கொரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டது. நோய் தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து, 2022-ம் ஆண்டு மே மாதம் கொரோனா மருத்துவமனை செயல்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டது.
திறக்கப்படாமல் இருந்த மருத்துவமனை:
புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சில மாதங்களில் தேசிய முதியோர் நல மருத்துவமனை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதோடு, மருத்துவமனைக்கான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களை நியமிக்குமாறு மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. 2 ஆண்டுகளுக்கான பணியாளர் ஊதியத்துக்கு நிதி ஒதுக்கீடும் செய்தது. ஆனால், நீண்டகால ஊதியத்துக்கான நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டுமென மத்திய அரசுக்குத் தமிழக அரசு கோரிக்கை வைத்தது. ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்து தேசிய முதியோர்நல மருத்துவமனைக்கு, மருத்துவர்களை மாற்றுவதிலும் நிர்வாக சிக்கல் நீடித்து வந்தது. இதனால், கட்டுமான பணிகள் முடிந்தும் இந்த மருத்துவமனை நீண்ட நாட்களாக பயன்பாட்டிற்கு வராமல் இருந்தது. இதனை விரைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் தான், தேசிய முதியோர் நல மருத்துவமனையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்.
மருத்துவமனை வசதிகள் என்ன?
தேசிய முதியோர் நல மருத்துவமனையில் வயதான நோயாளிகளுக்கான அனைத்து வசதிகளும், சிகிச்சை கட்டமைப்புகளும் இருக்கின்றன. 500 படுக்கை வசதிகள் இருந்தாலும், கொரோனா காலத்தில் இங்கு 750 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.