"போராட்டம் வெடிக்கும்.." தமிழக அரசுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த செளமியா அன்புமணி - ஏன்?
காவிரி கடைமடை பகுதிகளை டெல்டா பகுதிகளாக அறிவிக்காவிட்டால் பாமக போராட்டம் நடத்தும் என செளமியா அன்புமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே கரைமேடு கிராமத்தில் பரவலாற்று வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்காலை நம்பி மருவாய், நைனார்க்குப்பம், கல்க்குணம், அரங்கமங்கலம் உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
உபரிநீர் செல்ல முடியாத நிலை:
இந்த நிலையில் ஏரியின் வழியாக நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் சென்று வருகிறது. ஏரி முழுவதும் செடி கொடிகள் நிறைந்து புதர் மண்டி காட்சியளிப்பதால் உபரி நீர் செல்ல முடியாத நிலை உள்ளதாகவும் சிறிது மழை பெய்தாலே ஏறி நிரம்பி வயலில் தண்ணீர் வந்து விடுவதாக விவசாயிகள் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வந்தனர்.
செளமியா அன்புமணி போராட்டம்:
இந்த நிலையில் பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி தலைமையில் ஏராளமான பாமகவினர் பரவனாற்று வடிகால் பகுதியில் நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், கையில் பதாகைகளை ஏந்தியவாறு சௌமியா அன்புமணி தலைமையில் தமிழக அரசை கண்டித்தும் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தை கண்டித்தும் ஏரியை தூர்வார வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் பொழுது காவேரி டெல்டா கடைமடை பகுதிகளான மருவாய், நயினார்க்குப்பம் கல்குணம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை காவேரி டெல்டா பகுதிகளுடன் இணைத்து காவேரி டெல்டா பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என சௌமியா அன்புமணி வலியுறுத்தினார். மேலும், என்எல்சி நிறுவனம் சுரங்க தண்ணீரை சுத்திகரிக்காமல் அப்படியே வெளியேற்றுவதால் விவசாய நிலங்களில் கரி படிந்து விவசாயம் செய்ய முடியாத சூழல் உள்ளதாக சௌமியா அன்புமணி குற்றம் சாட்டினார்.
பாமக சார்பில் போராட்டம்:
மேலும், உடனடியாக தமிழக அரசு தலையிட்டு ஏரியை தூர்வாரி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினார் இதில் ஏராளமான விவசாயிகள் பாமகவினர் பங்கேற்றனர். காவேரி கடைமடை பகுதிகளை காவேரி டெல்டா பகுதிகளாக அறிவிக்காவிட்டால் பாமக சார்பாக போராட்டம் நடத்தப்படும் என சௌமியா அன்புமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.





















