கரூரில் பிரம்மாண்ட விழா - செந்தில் பாலாஜியை சூசகமாக பாராட்டிய முதல்வர்
அகில இந்திய அளவில் மின் உற்பத்தியில் முதல் மாநிலமாகத் திகழும் என்ற மகிழ்ச்சியான செய்தியை மக்களுக்கு இந்த அவையில் தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்.
தமிழகத்திலுள்ள மாவட்டங்கள் அனைத்தையும் சூரிய மின்சக்தி மாவட்டங்களாக (Solar District) மாற்றுவதற்கான நடவடிக்கைகளையும் நம்முடைய அரசு எடுத்து வருகிறது. இதனால், தமிழ்நாடானது, மின்உற்பத்தியில் முழுமையாக தன்னிறைவு பெறுவதோடு மட்டுமல்லாமல், அகில இந்திய அளவில் மின் உற்பத்தியில் முதல் மாநிலமாகத் திகழும் என்ற மகிழ்ச்சியான செய்தியை மக்களுக்கு இந்த அவையில் தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.
திமுக தேர்தல் பரப்புரையின் போது அளித்த வாக்குறுதியின் படி ஆட்சிப் பொறுப்பேற்ற ஆறு மாத காலத்திற்குள் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2வது கட்டமாக 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் தடாகோவில் பகுதியில் நடைபெறும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் துவக்க விழா நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று அதற்கான ஆணைகளை வழங்கினார். முதல் கட்டமாக கரூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் 20,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் விநியோகம் செய்வதற்கான ஆணைகள் வழங்கப்பட்டது. மீதமுள்ள விவசாயிகளுக்கு இன்னும் 100 நாட்களில் இணைப்பு வழங்கப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் கரூர் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று பயனடைய உள்ளனர். இந்நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், எம்.பி ஜோதிமணி, மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.
அப்போது உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்
மண் காக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதால் என் மனம் குளிர்ந்து இருக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி எதை செய்தாலும் முத்திரை பதிப்பார். தமிழக அரசு வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் இன்று. ஏற்கனவே 1 லட்சம் இணைப்புகள் வழங்கி இருக்கிறோம். அத்துடன் 50 ஆயிரம் இணைப்புகள் குறுகிய காலமான 13 மாததிற்குள் வழங்கி இருக்கிறோம். இதுவரை எந்த மாநிலத்திலும், இல்லாத சாதனையை தமிழகம் இந்த சாதனையை செய்து இருக்கிறது. பயனாளிகள் விபரம் என்ற புத்தகம் என் முன்னாள் வைக்கப்பட்டிருந்தது. 20 ஆயிரம் பயனாளிகளை அழைத்து இருக்கிறோம். அவர்களின் விபரம் இந்த புத்தகத்தில் இருக்கிறது. என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
நான் பெருமைப்படுகிறேன். இச்சாதனையை செய்துள்ள செந்தில் பாலாஜியை வாழ்த்துகிறேன். பல்வேறு நிகழ்ச்சிகளை டார்கெட் வெச்சு செய்பவர். தனக்கு ஒரு டார்கெட் வெச்சு முடித்தே தீருவார். இலக்கை தனக்கு தானே வைத்து கொண்டு, அதை முடித்து காட்டுபவர் நம் செந்தில் பாலாஜி. அவருக்கு உறுதுணையாக அதிகாரிகளுக்கும், ஒட்டுமொத்த விவசாய மக்களின் சார்பில் பாராட்டுகிறேன்.
இது நடக்குமா என கேள்வி எழுப்பினார்கள். முடியுமா என்பதை முடியும் என்பதற்கு எடுத்துக் காட்டு திராவிட மாடல் ஆட்சி. இந்த திட்டம் துவக்கப்பட்ட 6 மாதத்தில் அது முடிக்கப்பட்டது. இன்று 50,000 பேருக்கு கொடுக்க இருக்கிறேன். கலைஞரை நினைத்து பார்க்கிறேன். இந்தியாவிலேயே முதன் முதலாக 1989, 90 ஆண்டுகளில் இலவச மின்சார திட்டத்தை துவக்கி வைத்தார். 10 ஆண்டு காலம் அதிமுக ஆட்சி நடந்தது. அவர்கள் அந்த காலகட்டத்தில் 2 லட்சம் இணைப்புகள் தான் கொடுத்து இருந்தனர்.
எந்த துறை எடுத்துப் பார்த்தாலும், போட்டி போட்டுக் கொண்டு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. மின்னகம் மூலம் தீர்வு காணப்படுகிறது. அகில இந்திய அளவில் காற்றாழை, சூரிய மின் சக்தியில் முதலிடம் பிடித்து இருக்கிறோம். அனைத்து மாவட்டங்களையும் சூரிய சக்தி மாவட்டமாக மாற்ற உள்ளோம். தமிழகம் மின் உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் பிடிக்கும்.
தமிழகத்திலுள்ள மாவட்டங்கள் அனைத்தையும் சூரிய மின்சக்தி மாவட்டங்களாக (Solar District) மாற்றுவதற்கான நடவடிக்கைகளையும் நம்முடைய அரசு எடுத்து வருகிறது. இதனால், தமிழ் நாடானது, மின் உற்பத்தியில் முழுமையாக தன்னிறைவு பெறுவதோடு மட்டுமல்லாமல், அகில இந்திய அளவில் மின் உற்பத்தியில் முதல் மாநிலமாகத் திகழும் என்ற மகிழ்ச்சியான செய்தியை மக்களுக்கு இந்த அவையில் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறினார்.