karnataka Election: கர்நாடகாவிலும் விடமாட்டேன்: இபிஎஸ்க்கு எதிராக வேட்பாளரை அறிவித்த ஓபிஎஸ்! அதிமுகவில் பரபரப்பு
கர்நாடகா தேர்தலில் ஈபிஎஸ் சார்பிலான வேட்பாளருக்கு எதிராக, தனது தரப்பிலான வேட்பாளரை ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
கர்நாடகாவின் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக சார்பில் நெடுஞ்செழியன் போட்டியிடுவார் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இந்த நெடுஞ்செழியன் தற்போது கர்நாடக மாநில அதிமுக மாணவர் அணி செயலாளராக உள்ளதாக, கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேட்பாளரை அறிவித்த ஓபிஎஸ்:
அதிமுக சார்பில் அன்பரசன் என்பவரை புலிகேசி நகர் வேட்பாளராக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்த நிலையில், அவருக்கு எதிராக ஓபிஎஸ் தனது தரப்பு வேட்பாளரை அறிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பாவை சந்தித்து ஓபிஎஸ் அணியை சேர்ந்த புகழேந்தி வாய்ப்பு கேட்டிருந்தார். அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ் தனது தரப்பு வேட்பாளரை அறிவித்துள்ளார்.
கர்நாடக தேர்தலில் அதிமுக:
நாடாளுமன்ற தேர்தலை மையப்படுத்தி தேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இடம்பெற்றுள்ளது. தமிழ்நாட்டிலோ அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி தொடர்கிறது. இருகட்சிகளுக்கும் இடையே பல்வேறு கருத்து மோதல்கள் இருந்தாலும், பாஜக- அதிமுக கூட்டணி தொடர்கிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கூறியிருந்தார். ஆனால் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக தலைவர்களை விமர்சித்து வருகிறார். இந்நிலையில் தான், கர்நாடகா தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிடுவதற்கான முயற்சிகளை அதிமுக மேற்கொண்டு வந்தது.
முறிந்தது பாஜக - அதிமுக கூட்டணி:
ஆனால் பாஜக மேலிடமோ, அதிமுகவுக்கு எந்த வித ஆதரவும் தராமல் இருந்து வந்தது. இந்நிலையில் தான் கர்நாடகா மாநில அதிமுக அவைத் தலைவரான அன்பரசனை, புலிகேசி தொகுதி வேட்பாளராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனால், கர்நாடகாவில் அதிமுக - பாஜக கூட்டணி முடிவுக்கு வந்தது. இத்தகைய சூழலில் தான், புலிகேசி தொகுதியில் அதிமுக சார்பில் செடுஞ்செழியன் போட்டியிடுவார் என ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
போட்டி வேட்பாளருக்கான காரணம் என்ன?
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்வதை தடுக்கவே, கர்நாடகா தேர்தலுக்கான போட்டி வேட்பாளரை ஓபிஎஸ் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் இன்றுடன் வேட்புமனுத் தாக்கல் முடிவடைகிறது. எனவே, தங்கள் தரப்பு வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க, தம்மை அதிமுகவின் பொதுச்செயலாளராக உடனே அங்கீகரித்து முடிவை அறிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு, தேர்தல் ஆணையம் ஈபிஎஸ்-ஐ அங்கீகரித்துவிட்டால் ஓபிஎஸ்-க்கு அரசியல் எதிர்காலம் என்பதே கேள்விக்குறியாகிவிடும். எனவே நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகளை குறிப்பிட்டு, ஈபிஎஸ்-ஐ பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கூடாது என ஓபிஎஸ் வலியுறுத்தி வருகிறார். அதன் ஒருபகுதியாகவே புலிகேசி நகரில் ஓபிஎஸ் போட்டி வேட்பாளரையும் அறிவித்துள்ளார்.