2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே திருவண்ணாமலையில் சாமி தரிசனம்: ஆட்சியர் உத்தரவு
2 டோஸ் தடுப்பு ஊசி செலுத்தியவர்கள் மட்டுமே திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று வேகம் எடுத்து வரும் நிலையில் தமிழக அரசின் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தியது.
இதைத்தொடர்ந்து முழு ஊரடங்கை இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி உள்ளிட்டோர் ஆய்வு நடத்தினர். இதனிடயே திருவண்ணாமலை நகரில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட் ஆகியவை மாற்று இடங்களில் நாளை முதல் தற்காலிகமாக திருவண்ணாமலை காந்தி நகர் மைதானம், அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி எதிரே உள்ள மைதானம், கிரிவலப்பாதையில் உள்ள சந்த மேடு மைதானங்களில் செயல்பட உள்ளது. அந்த இடங்களையும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தனர்.
இதில் பொதுமக்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முக கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடிப்பது, உள்ளிட்டவைகளை கண்காணிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளியிடம் ஆட்சியர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர், “திருவண்ணாமலை மாவட்டத்தில் 114 பேர் கொரோனாவல் பாதிக்கப்பட்டுள்ளார்கள. நேற்று 70 பேர் அளவிற்கு ஒரு நாளில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் 3747 படுக்கை வசதி உள்ளது. அதில் 1980 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளது. மேலும் தேவைப்பட்டால் திருவண்ணாமலை பழைய மருத்துவக் கல்லூரியில் பயன்படுத்தப்படும். அரசின் வழிகாட்டுதலின்படி தற்போது கொரோனா நோயாளிகளுக்கு எந்த ஒரு அறிகுறி இல்லை என்றால் வீட்டிலேயே தனிமைப் படுத்தி கொண்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “இதில் கொரோனா நோயாளிகளுக்கு உடல் ரீதியான பிரச்சனை ஏதேனும் இருந்தால் மட்டும் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்கள். தற்காலிகமாக செயல்படும் மற்றும் காய்கறி மார்க்கெட்டுகளில் கொரோனா தடுப்பூசி முகாம் ஏற்படுத்தப்படும். காய்கறி மார்க்கெட்டில் வேலை செய்பவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை பரிசோதனை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ள ஆட்சியர் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நாளை முதல் (09.01.2022) பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இரண்டு டோஸ் தடுப்பு ஊசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்