ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் - தலைவர்கள் சொல்வது என்ன?
தமிழ்நாட்டில் நீண்ட நாட்கள் தமிழக அரசு வலியுறுத்தி வந்த ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு ஒப்புதலுக்கு அளிக்கப்பட்டது.
முதல்முறை நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், 2வது முறையாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் மசோதா நிறைவேற்றி அனுப்பப்பட்டது. ஆளுநர் கடந்த சில நாட்களாக ஒப்புதல் அளிக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க. கூட்டணி கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை கீழே காணலாம்.
கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர்:
தமிழக ஆளுநர் சட்டப்படி முன்பே ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். 2வது முறையாக மசோதா அனுப்பிவைக்கப்பட்டால் அரசியலமைப்புபடி கட்டாயம் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அரசமைப்பு விதி உள்ளது. சட்டவரைமுறைகளை மீறி ஒப்புதல் அளிக்காமல் இதுவரை இருந்தார். பொதுநிகழ்ச்சியில் ஒரு சட்டமசோதாவை கிடப்பில் போடுகிறோம் என்றால் அதை நிராகரிக்கிறோம் என்று அர்த்தம் என்றார். அதை எதிர்த்தும், கண்டித்தும் ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை வழங்கக்கோரியும் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சூழலில், ஆளுநர் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்திருப்பது அரசியல்கட்சிகள் அளித்த அழுத்தத்திற்கு ஆளுநர் அடிபணிந்து விட்டார் என்றே பொருள்
வில்சன், தி.மு.க. எம்.பி:
ஆளுநர் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே எங்களின் கருத்து. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அழுத்தம் தந்ததன் காரணமாகவே ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
ரவிக்குமார். எம்.பி., வி.சி.க.:
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை கண்டு மனம் திருந்தி ஆளுநர் நடவடிக்கை எடுத்ததாக பார்க்கிறேன். மற்ற மசோதாக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளித்தால் அரசியலமைப்புக்கு மதிப்பு அளிக்கிறார் என்று அர்த்தம்.
செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் சட்டமன்ற குழு:
மாநில அரசின் உரிமைகளை பாதுகாக்க வேண்டியவர் ஆளுநர் ஆர்.என்.ரவி. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் ஆளுநருக்கு கடந்த ஆட்சியில் ரூபாய் 5 கோடி வழங்கியுள்ளனர். இது எதற்காக? தமிழ்நாட்டு தமிழர்கள் விவரமானவர்கள். நீ ஒரு அடி பாய்ந்தால் 16 அடி பாய்வார்கள் என்பதற்கு இது உதாரணம். முதலமைச்சர் கண்ணியத்துடன் அவடர நடத்தினார். ஆளுநர் கண்ணியத்துடன் நடக்கவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் ஏராளமான மக்கள் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமும், ஆன்லைன் ரம்மி விளையாட்டால் கொலை சம்பவமும் அரங்கேறி வந்ததை சமீபகாலமாக காண முடிந்தது. இந்த நிலையில், ஆளுநர் கடந்த வாரம் குடிமைப்பணிக்கு தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடிய ஆளுநர் ஆர்.என்.ரவி, மசோதாவிற்கு ஒப்புதல் கோரி கோப்புகளை கிடப்பில் போட்டால் அதற்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை என்று நாகரீகமாக அர்த்தம் என்று கூறினார். அவரது பேச்சு தமிழக அரசு மட்டுமின்றி அரசியல் கட்சியினருக்கும் ஆதங்கத்தை ஏற்படுத்தியது.
மேலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் பற்றியும் ஆளுநர் பேசியது அரசியல் கட்சியினரின் கண்டனத்தை பெற்றது. இந்த சூழலில், ஆளுநருக்கு எதிராக இன்று சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





















