ரேசன் கடைகளுக்கான 400 மெட்ரிக் டன் வெங்காய கொள்முதல் ஆணை ரத்து - என்ன காரணம் தெரியுமா?
கொருக்குப்பேட்டை முனையத்தில் உள்ளதாகக் கூறப்படும் தரமற்ற வெங்காயம் கூட்டுறவுத் துறைக்கு சொந்தமானது அல்ல - தமிழக அரசு

இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு நிறுவனத்திடமிருந்து 400 மெட்ரிக் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்வதற்கான அரசாணையை தமிழக அரசு ரத்துசெய்துள்ளது. இது குறித்து கூட்டுறவுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வெங்காயம் தரமற்றதாக இருப்பது கண்டறியப்பட்டதால் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பிடமிருந்து தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் (TNCCF) வெங்காயத்தை கொள்முதல் செய்வதற்கான ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது.
3 கட்டங்களாக கொள்முதல் செய்யப்பட்ட வெங்காயம்
03.09.2026 அன்று குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.35-க்கு விற்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி 8,914 நகர்ப்புற நியாய விலைக்கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில், வெங்காய விற்பனைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு மற்றும் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திடமிருந்து மூன்று கட்டங்களாக 2,380.32 மெட்ரிக் டன் வெங்காயம் நியாய விலைக்கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டறியப்பட்ட தரமற்ற வெங்காயம்!
NAFED நிறுவனத்திடமிருந்து கிலோ ரூ.29-வீதம் 400 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய அக்டோபர் மாதம், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் (TNCCF) ஆணை வெளியிட்டிருந்தது. இக்கொள்முதலுக்கான வெங்காயம் 'A' தரத்திலும், குறைந்தபட்சம் 45 மி.மீ. அளவிலும் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மகாராஷ்டிராவில் கூட்டுறவுத்துறையினர் நடத்திய ஆய்விலும், கொருக்குப்பேட்டைக்கு வந்த மாதிரி மூட்டைகளில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், தரமற்ற மற்றும் அழுகிய பூஞ்சை பாதித்த வெங்காயங்கள் இருந்ததும், நிர்ணயிக்கப்பட்டதை விட அளவு குறைவாக இருந்ததும் கண்டறியப்பட்டது.
கொள்முதல் ஆணையை ரத்து செய்த தமிழக அரசு
தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் (TNCCF) கடந்த 31-ஆம் தேதியன்று தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்டிருந்த 400 மெட்ரிக் டன் வெங்காயக் கொள்முதல் மற்றும் விநியோக ஆணையை ரத்து செய்துள்ளது. கொருக்குப்பேட்டை முனையத்தில் உள்ளதாகக் கூறப்படும் தரமற்ற வெங்காயம் NAFED நிறுவனத்திற்கு சொந்தமானது எனவும், அது கூட்டுறவுத் துறையின் வெங்காயம் அல்ல எனவும் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















