பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
பாஜகவில் தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை, சாதி லாபியா என்று அக்கட்சியில் இருந்த திருச்சி சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவாவின் மகனான திருச்சி சூர்யா, பாஜகவின் இதர பிற்படுத்த பிரிவின் மாநிலச் செயலாளராக இருந்து வந்தார். இதற்கிடையே, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், களங்கம் விளைவிக்கும் செயல்களிலும் திருச்சி சூர்யா ஈடுபட்டதால் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக பாஜக அறிவிப்பு வெளியிட்டது.
இந்தத் தகவலை ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநிலத் தலைவர் சாய்சுரேஷ் குமரேசன் வெளியிட்டிருந்தார். இவரோடு கல்யாண ராமன் என்பவரும் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கிடையே சாதி அடிப்படையில் பாஜகவில் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்று திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:
’’பாஜக மையக் குழுவில் கட்சி தலைமையும் தலைவர்களையும் விமர்சித்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று என்னையும் கல்யாண ராம அவர்களையும் நீக்கினீர்கள். அதை நியாயம் என ஏற்றுக் கொள்கிறேன்.
தமிழிசை நாடார் என்பதாலா?
இதற்கெல்லாம் ஆரம்பப் புள்ளியாக இருந்து கட்சியில் ரௌடிகள் இருக்கிறார்கள் என்றும், அதிமுகவுடனான கூட்டணியைக் கெடுத்து வெற்றியை தடுத்து விட்டார் என்றும் மாநிலத் தலைவரின் செயல்பாட்டையும் விமர்சனம் செய்த தமிழிசை மேல் நடவடிக்கை ஏன் இல்லை? நாடார் என்பதாலா?
தமிழிசை சொன்னதை உண்மை என்று இந்திய தேசிய பாஜக தலைமை கருதி இருந்தால் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதற்கு தடையாக இருந்தது எது கவுண்டர் லாபியா?
பாஜக மையக் குழுவில் கட்சி தலைமையும் தலைவர்களையும் விமர்சித்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று என்னையும் கல்யாண ராம அவர்களையும் நீக்கினீர்கள் நியாயம் ஏற்றுக் கொள்கிறேன்.
— Tiruchi Suriyaa (@TiruchiSuriyaa) June 23, 2024
இதற்கெல்லாம் ஆரம்ப புள்ளியாக இருந்து கட்சியில் ரௌடிகள் இருக்கிறார்கள்… pic.twitter.com/Y72uFrtCKt
தமிழ்நாட்டில் பாஜக நாற்பது இடங்களில் தோற்றதிற்கு வீட்டு வாசலில் வெடி வெடித்து கொண்டாடிய, திமுகவின் கலைஞர் 100 நிகழ்ச்சியில் மேடை ஏறி உரையாற்றிய எஸ்.வி.சேகர் இன்னும் பாஜக உறுப்பினராக இருக்கிறார் ஏன் அவர் மீது நடவடிக்கை இல்லை? பிராமணர் என்பதாலா?
சாதி படிநிலை அடிப்படையில்தான் நடவடிக்கை பாயுமா?
எல்லோரும் இந்து என்று மேடையில் ஒப்புக்கு சொல்லிவிட்டு, சாதி லாபிகளுக்கு அடிபணிந்து Social Engineering அப்பட்டமாக அம்பலப்பட்டிருக்கிறது’’.
இவ்வாறு திருச்சி சூர்யா பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, பாஜகவில் ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளராக இருந்த திருச்சி சூர்யா, அக்கட்சியின் சிறுபான்மையினர் அணித் தலைவராக இருக்கும் டெய்சி சரணை ஆபாசமாக திட்டிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திருச்சி சூர்யாவை கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதித்தார். இதனால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக திருச்சி சூர்யா அறிவித்தது நினைவுகூரத்தக்கது.