Nithyananda: கைலாசாவில் சாதி இருக்கா? நித்தியானந்தா சொன்னது என்ன?
Nithyananda About Caste: கைலாசாவில் சாதி இருக்கிறதா என்பது குறித்தும் வருவதற்கான பயிற்சி குறித்தும் நித்தியானந்தா வீடியோ வெளியிட்டு விளக்கமளித்துள்ளார்.

Nithyananda About Caste: கைலாசா என்ற நாட்டை உருவாக்கியிருப்பதாக கூறிவரும் வரும், அங்கு வருவதற்கு ஒரு மாதம் பயிற்சி கட்டாயம் என்று தெரிவித்துள்ளார். மேலும், ஒரு மாதம் பயிற்சி ஏன் என்றும் கைலாசாவில் சாதி இருக்கிறதா என்ற கேள்விக்கும் விளக்கமளித்துள்ளார்.
கைலாசாவில் நித்தியானந்தா:
இந்திய அளவில் மட்டுமன்றி உலகளவிலும் பெரும் பிரபலமாக இருந்த நித்தியானந்தா, பெண் சீடர்களை தவறாக வழி நடத்துவதாகவும், பண மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, நித்தியானந்தாவுக்கு பெரும் எதிர்ப்புகள் எழுந்து போராட்டங்களும் நடைபெற்றன. இதனை தொடர்ந்து, இந்தியாவை விட்டு சென்ற நித்தியானந்தா தலைமறைவானார். பின்னர், கடந்த 2020ஆம் ஆண்டு கைலாசா என்னும் நாடு உருவாக்கப்பட்டதாக அறிவித்தார். தன் நாட்டுக்கு என தனி கொடி, பாஸ்போர்ட், பணம் ஆகியவற்றை உருவாக்கி இருப்பதாகவும் தெரிவித்தார். இது மட்டுமன்றி, கைலாசா நாட்டிற்கு புதியவர்கள் வரலாம் என்றும் அறிவிப்பு வெளியிட்டார்.
இறந்ததாக சர்ச்சை:
இதையடுத்து எங்கேதான் கைலாசா இருக்கிறது என பலரும் தீவிரமாக தேட ஆரம்பித்தனர். ஆனால், அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கப்பெறவில்லை. ஆனால், வடக்கு பசிபிக் தீவுகளில் கைலாசா இருப்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அவ்வப்போது, யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேரலையில் தோன்றி, அவரது பக்தர்களுக்கு உரை நிகழ்த்துவார். இந்த நிலையில்தான், சில தினங்களுக்கு முன்பு, நித்தியானந்தா மரணம் அடைந்ததாக, அவரின் சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை வீடியோவில் தெரிவித்தார். இந்தத் தகவல் வேகமாக பரவியது. இதையடுத்து, நேரலையில் தோன்றிய நித்தியானந்தா, தேவையற்ற வதந்திகளை சிலர் பரப்புகின்றனர் என்றும், உடல் ஆரோக்கியத்துடனும், உத்வேகத்துடனும் இருப்பதாக தெரிவித்தார்.
கைலாசா வருவதற்கு முதல் படி:
தற்போது கைலாசா வருதற்கு முதல் படி என்ன என்பது குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது ,, ‘ கைலாசாவிற்கு வருவதற்கு ஒரு மாத பயிற்சி வகுப்பு கட்டாயம். இந்த ஒரு மாத பயிற்சி வகுப்பானது இலவசமாகும். ஒரு மாதம் பயிற்சி வகுப்பில் பங்கேற்றால், கைலாசாவை புரிந்து கொள்வீர்கள். கைலாசா என்ன, சட்டதிட்டங்கள் என்ன, வாழ்க்கை முறை என்ன என்பதை புரிந்து கொண்டு, உங்களுக்கு கைலாசா வேண்டுமா என்பதற்கு, ஒரு மாதம் தேவை. அதுமட்டுமின்றி, இந்த வாழ்க்கை முறையில், அடிப்படையான பயிற்சி வேண்டும். அதற்காகத்தான் ஒரு மாத பயிற்சி. நீங்கள் எந்த நாட்டில் இருந்து கொண்டு கலந்து கொண்டாலும், இந்த பயிற்சி வகுப்பு இலவசம். தற்போது 3 மூன்று நாடுகளில் அளிக்கப்படுகிறது. அடுத்து விரிவாக்கம் செய்யப்படும். யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்திருக்கிறார்.
கைலசாவில் சாதி இருக்கா?
மேலும், கைலாசாவில் சாதி இல்லை, வர்ணாசிரம தர்மமே உண்டு. சாதி என்பது பிறப்பின் அடிப்படையில் வருவது. வருணாசிரமம் குணாதிசயங்கள் அடிப்படையில் வருவது. நீங்களே முடிவு செய்து கொள்ளலாம், எந்த வர்ணத்தவர் என்று. கைலாசாவில் சாதி பாகுபாடு சார்ந்து, எந்த முடிவும் எடுப்பதும் இல்லை. கைலாசாவில் சாதி, மதம் பாகுபாடு கிடையாது, யார் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம் என நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
வர்ணாஸ்ரம தர்மம்: கைலாஸாவில் ஜாதி இல்லை #Nithyananda #Kailasa pic.twitter.com/lZA636JzvR
— KAILASA's SPH NITHYANANDA (@SriNithyananda) April 8, 2025
இந்நிலையில், நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா என்ற சர்ச்சை எழுந்த வந்த நிலையில், நேரலையில் வந்து உயிரோடு இருக்கிறேன், இன்னும் பல ஆண்டுகள் இருப்பேன் என தெரிவித்திருந்தார். தற்போது, கைலாசாவுக்கு யார் வேண்டுமானாலும் வருகை தரலாம் என்றும், அதற்கு ஒரு மாத பயிற்சியும் இருக்கிறது எனவும் தெரிவித்திருக்கிறார். ஆனால், கைலாசா எங்கே இருக்கிறது என்பதை அவர் கூறவில்லை.





















