New Year Celebration Restrictions: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன?
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு காவல்துறை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு சில கட்டுப்பாடுகள் மற்றும் நெறிமுறைகளை அறிவித்திருந்தது. இந்நிலையில் சென்னையில் வரும் 31ஆம் தேதி புத்தாண்டு அன்று கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை சென்னை காவல்துறை தற்போது அறிவித்துள்ளது.
அதன்படி புத்தாண்டு அன்று கொண்டாட்டம் என்று மக்கள் ஒன்றுகூடுவதை தவிரக்க வேண்டும். மெரினா, எலியாட்ஸ், பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் கூட வேண்டாம் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. அதேபோல் ரிச்சர்ட்டுகள், பண்ணை வீடு, அரங்குகள், கிளப்களில் வர்த்தக் ரீதியான நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றில் DJ இசை நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லா ஆகிய இடங்களில் மக்கள் ஒன்று கூடி புத்தாண்டு நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்றும் சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மெரினா கடற்கரை சாலையில் 31ஆம் தேதி இரவு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது அன்று இரவு மெரினா கடற்கரை, போர் நினைவுச்சின்னம் முதல் காந்தி சிலை வரை வாகனங்கள் செல்லத் தடை என்று சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. இவை தவிர காமராஜர் சாலை, பெசன்ட் நகர் கடற்கரை ஒட்டிய சாலைகளிலும் வாகனங்கள் செல்ல தடை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் 31ஆம் தேதி இரவு சாலைகளில் பைக் ரேஸ் என்ற அதிவேகமாக சாலையில் இரு சக்கர வாகனங்களை இயக்கினால் காவல்துறை சார்பில் பெரும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. 31ஆம் தேதி இரவு 11 மணி வரை உணவு விடுதிகள் சென்னையில் செயல்பட காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
முன்னதாக இன்று தமிழ்நாட்டில் மேலும் 11 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மருத்துவத்துறை கூறியிருந்தது. ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டோரில் சென்னையில் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி, திருவண்ணாமலை, திருவாரூரில் தலா ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தமிழ்நாட்டில் இதுவரை 45 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 4 பேர் குணமடைந்துள்ளதாகவும் மருத்துவத்துறை தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: விழுப்புரம் : மரக்காணம் பகுதியில் விசைப்படகு, மீன் வலையில் சிக்கும் ஆலிவ்ரிட்லி ஆமைகள்