TN Weather Report: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு என்ன.?
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அது எவ்வளவு நேரத்தில் தெரியுமா.?

வங்கக் கடலில் ஏற்கனவே உருவான மோன்தா புயல் சமீபத்தில் ஆந்திராவில் கரையை கடந்தது. இந்நிலையில், அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது குறித்து தற்போது பார்க்கலாம்.
அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி
தெற்கு மியான்மர், அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், அதேபோல் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு குழற்சி, அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழை
தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நேற்று மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று(31.10.25) காலை அதே பகுதியில் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, அடுத்த 24 மணி நேரத்திற்கு, வடக்கு-வடகிழக்கு திசையில், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் வழியாக, குஜராத் கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என கூறப்பட்டுள்ளது. தெற்கு மியான்மர் கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மாற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் நவம்பர் 2-ம் தேதி வரை பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும், ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நவம்பர் 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலைய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை முன்னறிவிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் மேகமூட்டத்துன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




















