AK Rajan committee: ஏ.கே.ராஜன் கமிட்டியை அமைத்தது செல்லாது : சொல்கிறது மத்திய அரசு!
ஏ.கே.ராஜன் கமிட்டி குறித்து மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது
நீட் தேர்வின் தாக்கத்தை அறிய தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான கமிட்டி தேவையற்றது என்றும், செல்லாது என்றும் மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு விளக்கமளித்துள்ளது. 'ஒரு தேசம், ஒரு தகுதி' என்ற கொள்கையை நீட் பின்பற்றுகிறது எனவும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
முன்னதாக, நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அமைத்ததற்கான அரசாணையை எதிர்த்து பாஜக வழக்கு தொடுத்தடு. தமிழக பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை அமைத்து தமிழ்நாடு அரசு தேவையில்லாமல் நாடகம் நடத்துகிறது. இந்தத் தேர்வை ஏற்கெனவே உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது. மேலும் இந்த நீட் தேர்வு 2012ஆம் ஆண்டு திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. நமது நாட்டில் உள்ள கூட்டாட்சி தத்துவம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவின் தலைவரான நீதியரசர் ஏ.கே. ராஜன் கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி நீட் தேர்வு பாதிப்பு தொடர்பாக பெரியார் திடலில் பேசியுள்ளார். இந்த நிகழ்ச்சி தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் உள்ளது. அப்படி இருக்கும் போது அவர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தால் அது எப்படி பாரபட்சம் இல்லாமல் செயல்படும்.
இதுபோன்று மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்காமல், மாநிலத்திற்கு நலன் தரும் ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு மாநில அரசு உறுதுணையாக இருக்கவேண்டும். மருத்துவ படிப்புகளுக்கு இடம் நிரப்புவதில் நடைபெற்று வந்த ஊழலை தடுக்கவே இந்த நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. இதற்கு முன்பு மருத்துவ படிப்பில் சேர பல லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டது அனைவரும் அறிந்த ரகசியம். தேவையில்லாத நாடகங்களை நிகழ்த்துகிறார்கள். அப்படி ஊழல் செய்துவந்த நிறுவனங்கள் தூண்டு விடுவதால் சில அரசியல்வாதிகள் நீட் தேர்விற்கு எதிராக பேசி வருகின்றனர்” எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கில், அரசுத்தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரத்திடம் விளக்கம் கேட்ட நீதிபதிகள், நீட் தேர்வு உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நடத்தப்படும் நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை பாதிக்கும் வகையில் எந்த மாநிலங்களும் முடிவெடுக்க கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்த நிலையில், நீட் தேர்வை பாதிக்கும் வகையில் தமிழக அரசால் குழு அமைக்கப்பட்டிருக்கிறதே அது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டதா? என கேள்வி எழுப்பினர்
இதற்கு பதிலளித்த அரசுத் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ஆளுங்கட்சி தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையிலேயே நீட் தேர்வு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து ஆராய ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் கொள்கை முடிவை எடுக்கவே இந்த குழுவை தமிழக அரசு அறிவித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.இதற்கிடையே இந்த வழக்கு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டிருந்த நிலையில் அரசு தனது தரப்பு பதிலைத் தற்போது தெரிவித்துள்ளது.