Rocket Raja remanded: ராக்கெட் ராஜாவை வரும் 20-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நாங்குநேரி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு!
பனங்காட்டு படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜாவை வரும் 20-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நாங்குநேரி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பனங்காட்டு படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜாவை வரும் 20-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நாங்குநேரி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பனங்காட்டு படை கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா. 20-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய இவரை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து நேற்று திருநெல்வேலி போலீசார் கைது செய்தனர். நாங்குநேரியைச் சேர்ந்த சாமிதுரை என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ராக்கெட் ராஜாவை திருநெல்வேலி போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே இரண்டு பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள ராக்கெட் ராஜா மீது ஏற்கனவே ஏராளமான வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பனங்காட்டுப் படை கட்சித் தலைவரான ராக்கெட் ராஜா பிரபல ரவுடி ஆவார். இவர் மீது 5 கொலை வழக்குகள் உட்பட 20க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் காவல்நிலையத்தில் நிலுவையில் உள்ளது. தேடப்பட்டு வந்த குற்றவாளியாக இருந்த பிரபல ரவுடி ராக்கெட்ராஜா திருநெல்வேலி மாவட்ட போலீசாரால் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக காவல்துறையினரால் அழைத்து வரப்பட உள்ளாதாக கூறப்பட்டது.
கடந்த ஜூலை மாதம் திருநெல்வேலி நாங்குநேரியில் சாமிதுரை என்ற இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்டார். நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளத்தை பூர்வீகமாக கொண்ட சாமிதுரை மீது கொலை, அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது குறிப்பிடதக்கது.
கடந்த ஜூலை மாதம் 27-ந் தேதி நள்ளிரவு பேருந்து நிறுத்தத்தில் தூங்கிக்கொண்டிருந்த சாமிதுரை வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது கொலை தொடர்பாக கோதைசேரியைச் சேர்ந்த முருகேசன், திசையன்விளை நடுநந்தன்குளத்தைச் சேர்ந்த விக்டர் ஆகியோர் ராதாபுரம் நீதிமன்றத்தில் ஏற்கனவே சரண் அடைந்தனர். இந்த சூழலில், இந்த கொலை வழக்கு தொடர்பாக பிரபல ரவுடியான ராக்கெட் ராஜாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரபல ரவுடியான ராக்கெட் ராஜா திசையன்விளை அருகே உள்ள ஆணைகுடியை பூர்வீகமாக கொண்டவர். ஏற்கனவே கட்டதுரை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக ராக்கெட் ராஜா இருந்தார். அந்த வழக்கில் இருந்து வெளியே வந்த ராக்கெட் ராஜா வெங்கடேஷ் பண்ணையாருக்கும், அவரது மறைவிற்கு பிறகு சுபாஷ் பண்ணையாருக்கும் நெருக்கமானார். பின்னர், போலீசார் பிடியில் சிக்காமல் தலைமறைவாகவே இருந்து வந்த ராக்கெட் ராஜா கடந்த 2018-ஆம் ஆண்டு சென்னையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த 2019-ஆம் ஆண்டு பனங்காட்டு படை என்ற கட்சியை ராக்கெட் ராஜா தொடங்கினார். அவரது கட்சி வேட்பாளராக நாங்குநேரி இடைத்தேர்தலில் ஹரிநாடார் களமிறங்கி மூன்றாவது இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்து கொலை வழக்கு உட்பட 20-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் நேரடித் தொடர்புடைய ராக்கெட் ராஜாவை கைது செய்திருப்பதற்கு திருநெல்வேலி காவல் துறையினரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் பனங்காட்டு படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜாவை வரும் 20-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நாங்குநேரி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.