பெட்டி தொலைந்துவிட்டதா? ’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ துறை குறித்து சீமான் பேச்சு..!
நாம் தமிழர் சீமான்: 50 நாட்களைக் கடந்துவிட்டோம். பாதி காலக்கெடு முடிந்துவிட்டது. என்னவானது தமிழகத்தின் பிரச்சினைகள்? எப்போது எல்லாவற்றையும் தீர்க்கப் போகிறார்கள்? அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லையே!
திமுக ஆட்சியமைந்தவுடன் 100 நாட்களுக்குள் தீர்வு எட்டப்படும் என வானளாவ அளந்தார்கள். ஆனால், மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லையே என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், " திமுக தான் எல்லாவற்றையும் தீர்க்கும் மாமருந்து; தமிழகத்தின் அத்தனைப் பிரச்சினைகளுக்கும் திமுக ஆட்சியமைந்தவுடன் 100 நாட்களுக்குள் தீர்வு எட்டப்படும் என வானளவ அளந்தார்கள். 50 நாட்களைக் கடந்துவிட்டோம். பாதி காலக்கெடு முடிந்துவிட்டது. என்னவானது தமிழகத்தின் பிரச்சினைகள்? எப்போது எல்லாவற்றையும் தீர்க்கப் போகிறார்கள்? அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லையே! மக்களின் பிரச்சினைகளைக் கடிதங்களாய் பெற்ற அப்பெட்டிகள் எங்கே? அதனை எப்போது திறப்பார்கள்? சாவி தொலைந்துவிட்டதா? இல்லை! பெட்டியே தொலைந்துவிட்டதா?" என்று கேள்வி எழுப்பினார்.
2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். திமுக அரசின் முதல் 100 நாட்கள், போர்க்கால அடிப்படையில் மக்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அர்ப்பணிக்கப்படும். என்ற உறுதிமொழியை அளித்திருந்தார். கடந்த மே 7ம் தேதி, தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற திட்டத்திற்கான அரசாணையில் கையெழுத்திட்டார். மேலும், இத்திட்டத்தின் சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டார்.
முன்னதாக, இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “சுமார் 4 லட்சம் மனுக்கள் இதுவரை இத்துறையில் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட அனைத்து மனுக்களும் மாவட்டவாரியாக, வகைவாரியாக பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மின்ஆளுமை முகமை மூலம் பராமரிக்கப்படும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதுவரை சுமார் 2.7 லட்சம் மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனுவும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் தனித்தன்மையுடன் கூடிய அடையாள எண் வழங்கப்பட்டு, அடையாள எண்ணுடன் கூடிய குறுஞ்செய்தி மனுதாரருக்கு அனுப்பப்படுகிறது. மனுக்களில் அளிக்கப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் அதன் தன்மைக்கேற்றவாறு தகுதியான மனுக்கள் ஒவ்வொன்றின் மீதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, உடனடி தீர்வு காண மாவட்ட அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்" என்று தெரிவித்தது.
மேலும், தனிநபர் கோரிக்கைகளை பொறுத்தவரை, முடிந்த அளவு விரைவாக அவர்களது மனுக்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தகுதியான மனுக்களுக்கு உடனடி தீர்வும், முடியாதவற்றிற்கு என்ன காரணத்தினால் மனுதாரர்களின் கோரிக்கை நிறைவேற்ற இயலவில்லை என்ற தெளிவான காரணம் அளிக்கவும், தொடர்ந்து மனு செய்வதைத் தவிர்க்கும் வகையில் மாற்று வழியில் அவர்களின் தேவைகளை நிறைவு செய்து கொள்ள வழிகாட்டுதல்கள் தரப்படும் என்றும் தெரிவித்தது. முன்னதாக, தமிழ்நாடு 16 -வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில், திமுக தலைமையிலான அரசு பதவியேற்று 44 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில், இதுவரை 63, 500 மனுக்களுக்கு தீர்வு கண்டிருப்பதாக ஆளுநர் தனது உரையில் தெரிவித்திருந்தார்.
’உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை’ எப்படி செயல்படுகிறது..?
100 நாட்களில் நான்கரை லட்சம் மனுக்களுக்குமான தீர்வை எட்டிவிடமுடியுமா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும், அதிகாரிகளின் நடவடிக்கைகளை வைத்து பார்க்கும்போது அத்தனை மனுக்களுக்கும் விரைவில் தீர்வு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை ஏற்படுவதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.