‛கண்டா வரச் சொல்லுங்க.... கையோட தரச் சொல்லுங்க...’ தேர்தல் செலவுத் தொகை ரூ.210 கோடி பாக்கி!
குண்டூசியில் தொடங்கி மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனம் வரை செலவு செய்த எந்த பணமும் இதுவரை அதிகாரிகளுக்கு வழங்கப்படவில்லை.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தலும் கடந்த மே மாதம் 2 ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் அதற்கான பராமரிப்பு, வாக்காளர் விரலில் வைக்கும் மை உள்ளிட்ட சில வகை செலவை மட்டும் தேர்தல் ஆணையம் நேரடியாக ஏற்றது.
மற்ற அனைத்து செலவுகளையும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட ஆட்சியரின் பொது நிதியிலிருந்து தேர்தல் பிரிவு அலுவலர், தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோரின் சொந்த பணத்தை செலவு செய்துள்ளனர். அது குறித்த அனைத்து ஆவணங்களும் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, மாநில அரசு மூலம் நிதியை விடுவிக்க தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது.
தேர்தல் முடிந்து 7 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், தேர்தல் பணிக்காக 210 கோடி ரூபாய் செலவழித்ததாக சமர்ப்பிக்கப்பட்ட தொகை, இதுவரை விடுவிக்கப்படாமல் உள்ளது. வரும் வரும் என காத்திருந்த அந்தந்த தேர்தல் அலுவலர்களும், வட்டாட்சியர்களும் பணத்தை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
குண்டூசி, பேனா, பல சைஸ் கவர்கள், சாக்குப்பை, வாக்காளர் பட்டியலின் பல ஆயிரம் பக்க நகல், பசை, விழிப்புணர்வு சுவரொட்டிகள், குப்பை தொட்டிகள், பிளாஸ்டிக் ட்ரம், அட்டை பாக்ஸ்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான மூன்று சக்கர வாகனங்கள், வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முககவசம் உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் என ஒவ்வொரு சாவடிக்கும் 120 வகையான பொருட்கள் அனுப்பட்டதாகவும், தேர்தல் பார்வையாளர்களுக்கு 24 மணி நேர கண்காணிப்பு பணிக்காக சொகுசு வாடகை வாகனங்கள் ஏற்பாடு, தினமும் 3 ஷிப்ட் வாகனங்கள், வீடியோ பதிவு, டிரைவர்கள், டீசல், பெட்ரோல், பேட்டா என ஒவ்வொரு பூத்திற்குள் பல லட்சம் செலவானதாகவும், ஒவ்வொரு தொகுப்பிற்கும் ரூ.1.20 கோடி ரூபாய் வரை செலவானதாகவும், இதுவரை செலவான தொகைக்கான முழு பில் உள்ளிட்ட ஆவணங்கள் அனுப்பப்பட்ட நிலையில் 7 மாதங்களாக இன்னும் தொகை விடுவிக்கப்படவில்லை என் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் புலம்புகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்