விருதுநகரில் ஜவுளி மண்டலம்.. பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..!
ஆடை பூங்கா மூலம் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்கள் பெரிதும் பயன் அடையும் என ஸ்டாலின் கடித்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தமிழ்நாடு உள்பட ஏழு மாநிலங்களில் ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என பிரதமர் மோடி நேற்று அறிவித்திருந்தார். "நம் நாட்டில் ஜவுளித் துறையை வலுப்படுத்த மத்திய அரசு பல்வேறு கட்டமைப்பு வசதிகளை செய்து வருகிறது.
ஏழு மாநிலங்களில் மெகா ஜவுளி பூங்கா:
அந்த வகையில், இந்தியாவில் ஏழு மாநிலங்களில் மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும்" என மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகய ஏழு மாநிலங்களில் மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும்.
இவை, நாட்டின் ஜவுளித் துறையை மேலும் வலுப்படுத்த உதவும். இந்த துறைக்கான அதிநவீன உள்கட்டமைப்பை வழங்கும் இந்த பூங்காக்கள் கோடிக்கணக்கான முதலீட்டை ஈர்ப்பதுடன் லட்சக்கணக்கான வேலைகளை உருவாக்கும்" என குறிப்பிட்டிருந்தார்.
மோடிக்கு நன்றி தெரிவித்து ஸ்டாலின் கடிதம்:
அதன்படி, தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் குமாரலிங்கபுரத்தில் பி.எம்.மித்ரா திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம், ஆடை பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில், பிரதமரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ஆடை பூங்கா மூலம் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்கள் பெரிதும் பயன் அடையும் என ஸ்டாலின் கடித்தில் தெரிவித்துள்ளார். பி.எம். மித்ரா திட்டம் தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பூயூஸ் கோயலுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமரபின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் ஆடை பூங்கா திட்டத்தை தமிழ்நாட்டில் சிப்காட் மூலம் செயல்படுத்தவும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆடை பூங்கா அமைய உள்ள இடத்தில் 1,052 ஏக்கர் நிலத்தை சிப்காட் நிறுவனம் வைத்துள்ளது. நிலம் சிப்காட் வசம் இருப்பதால் உடனே அங்கு திட்டத்தை செயல்படுத்திட அந்நிறுவனம் தயாராக உள்ளது என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.