அடிமேல் அடி வாங்கும் சட்டம் ஒழுங்கு.. என்ன செய்யப்போகிறார் மு.க.ஸ்டாலின்? தேர்தல் நேரத்தில் இப்படியா?
தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில் சட்டம் ஒழுங்கை கேள்விக்குள்ளாக்கும் வகையில் பல சம்பவங்கள் அரங்கேறி வருவது திமுக ஆட்சிக்கு பி்ன்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் ஆட்சிக்கட்டிலில் அமர தீவிர நடவடிக்கையில் உள்ளனர். ஆளுங்கட்சியான திமுக-வை வீழ்த்தி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அதிமுக-வும், முதன்முறை ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற விஜய்யும் மும்முரம் காட்டி வருகின்றனர்.
தேர்தல் நேரத்தில் இப்படியா?
திராவிட மாடல் அரசு என்று மத்திய பாஜக-விற்கு சவால் விடும் அளவிற்கு ஆட்சியில் அமர்ந்தது முதலே பா.ஜ.க.விற்கும், அதிமுக-விற்கும் திமுக அரசு பரப்புரைகள் மூலம் பதில் கூறி வருகிறது. ஆனால், தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக அரசு சந்திக்கும் நெருக்கடிகள் அவர்களுக்கு அழுத்தம் மேல் அழுத்தம் அளித்து வருகிறது.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை கேள்வி கேட்கும் விதமாக அடுத்தடுத்து அரங்கேறும் சம்பவங்கள் மக்களை மிக கடுமையாக பாதித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர் என்று பேசினாலும் நடக்கும் சில சம்பவங்கள் அதற்கு நேர்மாறாக உள்ளது.
கடத்தல் வழக்கில் ஏடிஜிபி:
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் விவகாரத்தில் சிறுவனை கடத்திய வழக்கில் அதிமுக ஆதரவு கட்சி எம்.எல்.ஏ.வான பூவை ஜெகன்மூர்த்தி சிக்கிய நிலையில், அவரை காட்டிலும் கையும் களவுமாக சிக்கியிருப்பவர் காவல்துறை அதிகாரியான ஏடிஜிபி ஜெயராம். கடத்தலுக்கு அரசின் காவல்துறை வாகனத்தையே அவர் பயன்படுத்தியதுதான் அதிர்ச்சியின் உச்சம்.
சட்டம், ஒழுங்கை பராமரிக்கும் காவல்துறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். ஆனால், அவர் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையின் ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரி இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இது ஆளுங்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மூதாட்டிக்கு பாலியல் தொல்லை:
இந்த சம்பவம் ஒரு புறம் அதிர்ச்சியை உண்டாக்கிய நிலையில், கடலூரில் 80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவத்தை செய்த இளைஞரை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர். இயற்கை உபாதைக்கு சென்ற வயதான மூதாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்லாமல் இருப்பதும் பெண்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு:
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை கேள்விக்குள்ளாக்கும் வகையில் தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் திமுக அரசுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. மு.க.ஸ்டாலின் அரசு தலைமைப் பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டில் நடந்த குற்றச்சம்பவங்கள் தற்போது வரை திமுக அரசுக்கு கரும்புள்ளியாகவே உள்ளது.
கொலைகளும், கொள்ளைகளும்:
டிஜிபியாக சைலேந்திர பாபு பொறுப்பு வகித்தபோது திருவண்ணாமலையில் ஒரே நாளில் நடந்த ஏடிஎம் கொள்ளை சம்பவங்கள் அதிர்ச்சி அளித்தது. பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் துடைக்க முடியாத கறையாக மு.க.ஸ்டாலின் ஆட்சி மீது விழுந்துள்ளது.
வட மாவட்டங்களில் பல இடங்களில் கள்ளச்சாராய விற்பனை நடப்பதாக தொடர் புகார்கள் எழுந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து ஏராளமானோர் உயிரிழந்த சம்பவம் பல குடும்பங்களை கண்ணீரில் ஆழ்த்தியது. இதுதவிர தமிழ்நாட்டின் பல இடங்களில் நடந்த கொள்ளை சம்பவங்கள், திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் என பல அதிர்ச்சியடைய வைக்கும் சம்பவங்கள் திமுக ஆட்சியில் நடந்துள்ளது.
என்ன செய்யப்போகிறது திமுக?
தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில் திமுக ஆட்சியில் நடந்த இந்த குற்ற சம்பவங்களை பட்டியலிட்டு மக்கள் மத்தியில் பரப்புரை மேற்கொள்ள எதிர்க்கட்சியில் வியூகம் வகுத்துள்ளனர். முதலமைச்சர் பொறுப்பு வகிக்கும் காவல்துறை உரிய நடவடிக்கைகளை எடுக்காததும், அவர்களின் அலட்சியமுமே இதற்கு காரணம் என்று பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டுகளுக்கு மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக எப்படி பதிலளிக்கப்போகிறது? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.





















