Udhayanidhi Stalin:’நிதியைத்தான் கேட்டேன்.. தவறாக பேசவில்லை ’ - நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர் உதயநிதி
தமிழ்நாட்டு மக்கள் கடும் பேரிடரில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை பேரிடர் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்க மறுப்பது ஏன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டு மக்கள் கடும் பேரிடரில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை பேரிடர் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்க மறுப்பது ஏன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான வங்கிக்கடன் இணைப்பு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதியிடம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்ன குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, “நான் எதாவது ஒரு கெட்ட வார்த்தை பயன்படுத்தினேனா?. மரியாதைக்குரிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மீண்டும் மரியாதையா நான் கேக்குறது ஒன்று தான். இதை நான் எனக்காக கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் கடும் பேரிடரில் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரோ பேரிடர் என்பதையே ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்.
நிதியமைச்சர் எதை வைத்து இப்படி பேசினார் என தெரியவில்லை. ஒரு ஒன்றியக்குழு அமைத்தார்கள். அவர்களும் வந்து ஆய்வு செய்து இது மிகப்பெரிய பாதிப்பு எற்பட்டுள்ளது. அரசும் சிறப்பா செயல்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்கள். ஆனால் இவரோ இதனை அரசியலாக்க நினைக்கிறார்கள். நான் யாரையும் மரியாதைக்குறைவாக பேசவில்லை. நேற்று கூட நிர்மலா சீதாராமனுக்கு கருத்துக்கு பதிலளித்திருந்தேன்.
தூத்துக்குடி மாவட்ட மக்கள் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இன்னும் சில இடங்களில் தண்ணீர் வடியவில்லை. நான் நேற்று ஏரல் பகுதிக்கும், முந்தைய நாள் காயல்பட்டினத்திற்கும் சென்று பார்வையிட்டேன். நாளை மறுநாள் மீண்டும் செல்லவிருக்கிறேன். அரசியல் அமைப்பினர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் களத்தில் இருந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் அவர்கள் பாதிப்பில் இருந்து வெளியே வரவில்லை. எனவே மக்கள் பாதிப்பை புரிந்துக்கொண்டு நம்முடைய நிதியை தான் கேட்டுள்ளோம்” என கூறினார்.
அப்போது நிர்மலா சீதாராமன் நீங்கள் வார்த்தைகளில் நாகரீகம் கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தார்களே? என்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘நான் என்ன அநாகரீகமாக பேசினேன். என்ன வார்த்தை என சொன்னால் நான் திருத்திக் கொள்கிறேன். அப்பன் என்ற வார்த்தை கெட்ட வார்த்தையா? - நிதியமைச்சர் சொன்னவுடன் நான் மரியாதைக்குரிய அப்பா என மாற்றிக் கொண்டேன். மேலும் 9.5 ஆண்டுகள் பாஜக ஆட்சியே தேசிய பேரிடர் தான். அதனால் தான் தமிழ்நாடு பாதிப்பை பேரிடராக பிரித்து பார்க்க மாட்டேங்குகிறார்கள்” என கூறினார்.
மேலும், “மிக்ஜாம் புயல் சென்னையில் மழை பெய்தபோது சென்னையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தற்போது கூட சேலத்தில் இருந்த நான் தென்மாவட்ட பாதிப்பை பார்த்தவுடன் சென்னை கூட வராமல் அங்கு சென்றேன். அதேசமயம் இந்தியா கூட்டணி சார்பில் நடைபெற்ற கூட்டம் மிக முக்கியமானது. பிரதமர் மோடியை சந்தித்த பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் அடுத்த நாளே களத்திற்கு வந்து மக்களை சந்தித்தார். எல்லாருமே களத்தில் தான் இருந்தோம். நிர்மலா சீதாராமன் சொன்னதை அரசியலாக்க விரும்பவில்லை” என உதயநிதி தெரிவித்தார்.