Minister Sivasankar: கிளாம்பாக்கத்தை தேர்வு செய்தது அதிமுக ஆட்சி காலத்தில்தான் - அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
கிளாம்பாக்கத்தை தேர்வு செய்தது அதிமுக ஆட்சி காலத்தில்தான் திட்டமிடப்பட்டது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் சாலை விபத்துகளை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டியளித்தார்.
போக்குவரத்துத் துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சென்னை, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைப்பயணத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் இன்று தொடங்கி வைத்து, பின்னர் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டார்.
இந்த பேரணி, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தொடங்கி பேரணி, தீவுத்திடலில் நிறைவு பெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், “சாலை பாதுகாப்பை வலியுறுத்தி நடை பேரணி இங்கே நடைபெறுகிறது. 19 போதிலிருந்து 32 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் அதிகம் சாலை விபத்தில் பாதிக்கப்படுகிறார்கள்.
சாலை பாதுகாப்பு குறித்து மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த நிகழ்ச்சி நடக்கிறது. சாலை விபத்தில் உயிரிழந்தவர்களை காப்பாற்ற இன் உயிர் காப்போம் என்ற மகத்தான திட்டத்தை ஏற்படுத்தி, உயிரை காப்பாற்ற தமிழ்நாடு அரசு மருத்துவமனைக்கான தொகையை செலுத்தி உயிரைக் காக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
சாலை பாதுகாப்பு குறித்து மக்களிடத்திலும் விழிப்புணர்வு வரவேண்டும், கடந்த காலத்தைக் காட்டிலும் தற்போது சாலை விபத்து குறைந்திருந்தாலும் முற்றிலும் குறைக்க துறை நடவடிக்கை எடுத்து வருகிறது” கூறினார்.
தொடர்ந்து கிளாம்பாக்கம் விவகாரம் தொடர்பாக அமைச்சர் சிவசங்கரிடம் செய்தியாளர்கள் விளக்கம் கேட்டனர். அப்போது பதிலளித்த அவர், “அதிமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் 3,200 பேருந்துகள் மட்டுமே வாங்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சி பொறுப்பேற்று கொரோனா காலத்திற்குபின் சுமார் 4,000 பேருந்துகள் வாங்குவதற்கான ஒப்புதல் பெறப்பட்டு, படிப்படியாக வாங்கப்பட இருக்கிறது. மீதி இருக்கும் காலக்கட்டத்தில் இன்னும் கூடுதலாக புதிய பேருந்துகள் வாங்குவதற்கான நடவடிக்கைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு இருக்கிறார்கள். எனவே, எடப்பாடி பழனிசாமி அவரது ஆட்சி காலத்தில் என்ன செய்தார் என்பதை ஆராய்ந்து இங்கு பேச வேண்டும்.
கிளாம்பாக்கத்தை தேர்வு செய்தது அதிமுக ஆட்சி காலத்தில்தான் திட்டமிடப்பட்டது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை:
போக்குவரத்து நெரிசலை குறைக்க பாலம் கட்டப்படுமா என்று காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பினார். அதற்கு காரணம், ஸ்ரீபெரும்புத்தூரில் அதிகமான தொழிற்சாலைகள் உள்ளதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. ஸ்ரீபெரும்புத்தூரில் முதல் சிங்கப்பெருமாள் கோயில் வரை நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் குறைகள் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டு இருக்கிறார். இன்று ஆசியாவிலேயே மிகச் சிறந்த பேருந்து முனையமாக கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அமைந்துள்ளது. இதனை பல்வேறு பத்திரிக்கைகளும் பாராட்டி வருகிறது. இதையும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நம்ப மறுத்தால், அவர் கிளாம்பாக்கத்திற்கு வர தயார் என்றால், அழைத்து சென்று என்னென்ன வசதிகள் உள்ளது என்பதை காட்டுவதற்கு தயாராக இருக்கிறோம்.” என்றார்.
முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்:
கிளாம்பாக்கம் பேருந்து முனையம் விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது அவர், ”கிளாம்பாக்கத்தில் சிறு சிறு பிரச்சனைகள் இல்லை, பெரிய பிரச்சனைகள் இருந்தன. அனையெல்லாவற்றையும் நாங்கள் தீர்த்துள்ளோம். எதிர்க்கட்சி தலைவர் சொல்லக்கூடிய சிறு பிரச்சனையையும் தீர்த்து வைப்போம்” என்றார்.