இனி மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை: நல்ல செய்தி சொன்ன அமைச்சர் செந்தில் பாலாஜி
நான்கு நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை மீண்டும் இன்று கூடியது. வருவாய், பேரிடர் மேலாண்மை துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் இனி வரும் காலங்களில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
நான்கு நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை மீண்டும் இன்று கூடியது. வருவாய், பேரிடர் மேலாண்மை துறை மானியக் கோரிக்கைமீது விவாதம் நடைபெற்றது. கடந்த மாதம் 18-ஆம் தேதி கூடிய தமிழக சட்டப்பேரவை நிகழ்வின்போது, 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தொடர்ந்து 19-ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தொடர்ந்து 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்று பேரவை கூட்டம் முடிவடைந்தது. இந்நிலையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த 6-ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
பல்வேறு துறைகள் சார்பில் சட்டபேரவையில் உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களிடையே விவாதம் நடைபெற்றது. தொடர்ந்து, கோடை காலத்தில் மின்வெட்டு ஏற்படுமா..? மின்வெட்டு தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன..? போன்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்தார். அதில், “ஓர் ஆண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு என்னும் உன்னதமான திட்டத்தை கடந்த 29.03.22 ம் தேதி அன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த ஓர் ஆண்டு திட்டம் ஆறு மாத காலத்தில் முடிக்கப்பட்டு, கடந்த 16 ம் தேதி மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஓர் ஆண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு திட்டம் முதலமைச்சர் மு.க ஸ்டாலினால் வழங்கப்பட்டது. இதற்கு விவசாயிகள் சார்பிலும், மின் வாரியத்தின் சார்பிலும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, இந்த கோடை காலத்தில் மின் தேவை பொதுமக்களுக்கு அதிகம் தேவை. தற்போது தமிழ்நாட்டில் மின்சார உற்பத்தி 17,196 மெகாவாட் தேவையாக உள்ளது. இருப்பினும் தமிழ்நாட்டில் தற்போது மின்வெட்டு இல்லை என்றும், இனி வரும் காலங்களில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, இந்த மின்பற்றாக்குறையை போக்குவதற்காக போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடுத்தர கால கொள்முதலாக 400 மெகாவாட்டும், மத்திய மின் தொகுப்பில் இருந்து 555 மெகாவாட்டும், PTC மற்றும் நடுத்தர கால கொள்முதலாக 627 மெகாவாட் என மொத்தம் 1,582 மெகாவாட் அளவிற்கு மின்சாரம் பெறப்பட்டு வருகிறது.
அதேபோல், குறுகிய கால கொள்முதலாக ஏப்ரல் மாதத்திற்கு 965 மெகாவாட்டும், மே மாதத்திற்கு 925 மெகாவாட்டும், கூடுதலாக இந்த இரண்டு மாதங்களுக்கும் 260 முதல் 500 மெகாவாட் வரை பெறப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து, அனல்மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறையை போக்க, 4,80,000 டன் நிலக்கரியை பெற டெண்டர் விடப்பட இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்